Published : 06 Oct 2020 10:09 AM
Last Updated : 06 Oct 2020 10:09 AM
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்ற திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக மகளிரணியினர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸில் தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் இந்தியா முழுவதும் பெரிய அளவில் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளன.
இந்நிலையில், சென்னை சின்னமலை, ராஜீவ் காந்தி சிலை அருகே திமுக மகளிர் அணியினர் திரண்டனர். ‘நாம் ஏற்றும் ஒளி, தவறுகளை எரிக்கட்டும்’ என்ற முழக்கத்துடன் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீபச்சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். பேரணி, கனிமொழி எம்.பி. தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றது.
பேரணியில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட பெண்களை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT