Published : 06 Oct 2020 08:09 AM
Last Updated : 06 Oct 2020 08:09 AM
‘‘அதிமுக செயற்குழுவில் அடுத்து யார் முதல்வர் என்ற கேள்வியே எழவில்லை. வெளியில் தவறான கருத்து பரப்பப்பட்டு உள்ளது’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு சிறப்பாக செயல்பட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதுணையாக இருக்கிறார். அதிமுக செயற்குழுவில் வரும் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்றுதான் விவாதங்கள் நடந்தன. அடுத்து யார் முதல்வர் என்ற கேள்வி அங்கு எழவில்லை. வெளியில் தவறான கருத்து பரப்பப்பட்டு உள்ளது. அதிமுகவில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை தனது ட்விட்டர் பதிவில் துணை முதல்வர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அவர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் பெரியகுளம் வந்திருக்கும் நேரத்தில் அவரை கட்சி நிர்வாகிகள் சென்று சந்தித்தது வழக்கமான ஒன்று. கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்படாத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவர்களது பொருளாதாரத்தின் அடிப்படையில் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட்டனர். இது தற்காலிக ஏற்பாடாக இருந்தால் மகிழ்ச்சி. நிரந்தரமாக இருந்தால் திரையரங்குகள் பாதிக்கப்படும். திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம். திரைப்படத்துறையினர் கலந்து பேசிக்கொண்டுள்ளனர். விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT