Last Updated : 18 Sep, 2015 08:26 AM

 

Published : 18 Sep 2015 08:26 AM
Last Updated : 18 Sep 2015 08:26 AM

பேருந்தின் பலகை உடைந்து பெண் விழுந்த சம்பவம்: அதிகாரிகள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்

கேரள மாநிலம், கொட்டாரக் கராவுக்கு சென்ற தமிழக அரசு பேருந்தின் உள்புற தரைத்தள பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்து காயமடைந்த விவகாரம் தொடர்பாக தென்காசி கிளை மேலாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் காயங் குளத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுவாதி (30). சில நாட்களுக்கு முன்பு சுவாதி கணவருடன் தனது சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு வந்திருந்தார். இருவரும் கடந்த 15-ம் தேதி காயங் குளத்துக்கு புறப்பட்டனர்.

தென்காசிக்கு வந்து, அங்கிருந்து காலை 8 மணி அளவில் கேரள மாநிலம் கொட்டாரக்கரா செல்லும் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் ஏறினர். அந்தப் பேருந்தின் தரைப் பகுதிய மிகவும் சேதமடைந் திருந்தது. அதில் இருந்த ஓட்டைகளை மறைக்க பல கைகள் வைத்து ஒட்டுப் போட்டி ருந்தனர். பேருந்தின் பின்புற இருக்கையில் ராஜனும் சுவாதியும் அமர்ந்திருந்தனர்.

புனலூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் புறப்பட்டபோது, ஒட்டுப் போடப்பட்டிருந்த பலகை திடீரென்று உடைந்து விழுந்தது. அந்த ஓட்டை வழியாக சுவாதி சாலையில் விழுந்தார். இதைப் பார்த்ததும் ராஜனும் சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்து அலறினர். உடனே பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். சாலையில் விழுந்து லேசான காயங் களுடன் உயிர்தப்பிய சுவாதியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்து வமனையில் சேர்த்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு புனலூர் போலீஸில் சுவாதி புகார் செய்தார். அதன்பேரில், தென்காசி வட்டார போக்கு வரத்து அதிகாரி மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேருந்து ஓட்டையில் சுவாதி விழும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள கடை முன்பு வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியி ருந்தது. அந்தக் காட்சிகள் நேற்று முன்தினம் வாட்ஸ் அப் மூலம் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையடுத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தென்காசி கிளை மேலாளர் சசிகுமார், உதவிப் பொறியாளர் சரவண பெருமாள், தொழில்நுட்ப பணியாளர்கள் கருப்பசாமி, தனபால், பேருந்து ஓட்டுநர் மாடசாமி, நடத்துநர் குமரேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருநெல் வேலி அரசுப் போக்கு வரத்துக் கழக பொதுமேலாளர் கஜேந்திரனிடம் கேட்டபோது, ‘‘அரசு போக்குவரத்துக் கழக தென்காசி கிளை மேலாளர், உதவி பொறியாளர் மற்றும் தொழில்நுட்பப் பணி யாளர்கள் இந்தப் பேருந்தை இயக்கி இருக்கக் கூடாது. தங்கள் கடமையிலிருந்து தவறியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x