Published : 05 Oct 2020 08:28 PM
Last Updated : 05 Oct 2020 08:28 PM
தமிழ் மீது தீராத பற்று கொண்டவர்கள் போல் காட்டிக்கொண்டு வரும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு தமிழாசிரியர்கள் பணியிடங்களைப் பத்து ஆண்டுகளாக நிரப்பாமல் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''புதுச்சேரி அரசுக் கல்வித்துறையில் 10 ஆண்டுகாலமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாகத் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் பணி ஆணை இன்று வரை வழங்கப்படாமல் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் தமிழ் ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசு இன்று வரை வெளியிடவில்லை.
நம் தாய்மொழி தமிழ் மீது தீராத பற்று கொண்டவர்கள் போல் காட்டிக்கொண்டு வரும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு, 10 ஆண்டுகளாகத் தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்பவில்லை. ஆசிரியர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்கும் தமிழ் மொழி அறிவை வளர்த்துக்கொள்ள சாத்தியக்கூறுகளே இல்லாமல், தமிழ் மொழிக் கல்வியில் பின்னோக்கி உள்ளனர். எதற்கெடுத்தாலும் யாரையாவது காரணம்காட்டி, நிர்வாகத் திறமை இல்லாமல் மெத்தனப் போக்கில் ஆட்சி செய்துவரும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு, கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பாமல் கல்வியின் தரத்தைப் பாழாக்கி வருகின்றனர்.
இதேபோல், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மழலையர் கல்வி கற்பிப்பதற்குத் தகுந்த ஆசிரியர்களான பாலசேவிகா காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர்களாகப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பதவிகளை, புதுச்சேரி அரசின் கல்வித்துறை இதுவரை நிரப்பவில்லை. இதனால் மாணவர்களுக்கு முழுமையான ஆரம்பக் கல்வி கிடைப்பதில்லை.
இதுபோல் தொடக்கக் கல்வி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படாமல் இருந்தால் மாணவர்களின் எதிர்காலம், கல்வியின் தரம் அனைத்தும் புதுச்சேரி மாநிலத்தில் பாழாகிவிடும். மேலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்குக் கடந்த 10 மாதங்களுக்கு மேலாகச் சம்பளம் வழங்காமல் புதுச்சேரி அரசு உள்ளது.
இந்த அவல நிலைகளைப் புதுச்சேரி அரசு உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் துயரைத் துடைக்க பாஜக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்''.
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT