Published : 05 Oct 2020 07:45 PM
Last Updated : 05 Oct 2020 07:45 PM
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புரசலூரில் கோட்டுருவமாக வரையப்பட்ட குதிரையின் படத்துடன் காரணவர் பெயர் குறிப்பிடும் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூர் கண்மாயில் சிதறிக் கிடக்கும் கற்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் செ.ரமேஷ், த.ஸ்ரீபால் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, புரசலூர் கண்மாய் பகுதியில் பழமையான ஒரு கோயில் இருந்து அழிந்து போயிருக்கிறது. அக்கோயில் கற்கள் கண்மாயில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
இக்கற்களை பல ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் கண்மாய் மடைகள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில் புதிதாக மடை கட்டுவதற்காக பழைய கற்களை அகற்றியபோது அதில் கல்வெட்டுகள் இருந்ததை அவ்வூரைச் சேர்ந்த ரமேஷ், ஸ்ரீபால் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
கண்மாயில் சிதறிக் கிடப்பவை, கோயில் கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள ஜகதி, குமுதம், யாளிவரி ஆகியவற்றின் உடைந்த பகுதிகள் ஆகும்.
இதில் ஜகதியில் இரண்டும், குமுதத்தில் ஒன்றுமாக மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முழுமையாக இல்லாமல் துண்டுகளாக உள்ள இக்கல்வெட்டுகள் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.
உடைந்த கல்லில் உள்ள 4 வரி கல்வெட்டில் நிலத்தின் எல்லை குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்வூர் கோயிலுக்கு நிலதானம் வழங்கி இருப்பதை அறியமுடிகிறது. இதில் வருள்வாசகநல்லூர் எனும் ஊர் குறிப்பிடப்படுகிறது. இது திருவருள்வாசகநல்லூராக இருக்கலாம். இரு துண்டுக் கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.
இதில் ஒன்றில் இத்திகுளத்தராயன் என்பவர் பெயரும், அஞ்சு நிலையூர்க்கு சமைந்த காரணவர் பெயரும், அடுத்ததில் வெண்கலம் பறித்து மண்கலம், சுபமஸ்து ஆகிய சொற்களும் காணப்படுகின்றன. இதில் காரணவர் பெயருக்குக் கீழே குதிரையின் படம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது.
காரணவர், படைக்காரணவர் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுபவர்கள் படை வீரர்கள் ஆவர். இக்கல்வெட்டில் குதிரை படம் வரையப்பட்டிருப்பதன் மூலம் அவர்களை குதிரைப்படை வீரர்களாகக் கருதலாம். அஞ்சு நிலையூர் காரணவர்கள் இவ்வூர் கோயிலுக்கு தானம் வழங்கி இருக்கலாம்.
அருப்புக்கோட்டை, இலுப்பைக்குடி, பள்ளிக்குறிச்சி, திருமோகூர் ஆகிய ஊர்களில் இருந்த காரணவர் பற்றி கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறது. படைவீரர்களுக்குத் தானமாக மன்னர்கள் வழங்கிய பள்ளிக்குறிச்சி என்ற ஊரை காரணவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர்.
கல்வெட்டில் சொல்லப்படும் அஞ்சு நிலையூர் மதுரை அருகிலுள்ள நிலையூராக இருக்கலாம். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம், நரிப்பையூர் உள்ளிட்ட சாயல்குடியின் கடற்கரைப் பகுதியிலும், அருப்புக்கோட்டை, மதுரையிலும் காரணமறவர்கள் என்பவர்கள் தற்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூர் தொடக்கப்பள்ளி அருகில், கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறிய பெண்களுக்கான இரு சதிக்கற்கள் உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT