Published : 05 Oct 2020 07:38 PM
Last Updated : 05 Oct 2020 07:38 PM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் அரசின் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது ஏப்.1 முதல் அக்.03 வரை ரூ.2,40,86,009 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
முதல்வர் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மருத்துவ வல்லுநர் குழவின் ஆலோசனையின்படி ஊரடங்கிலிருந்து பல்வேறு கட்டத் தளர்வுகளை அறிவித்துள்ளார். தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் , வங்கிகள் , அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது அரசு அறிவித்துள்ளது.
தற்போது பொதுமக்கள் தங்களின் தங்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் பணி நிமித்தம் காரணமாக அதிக அளவில் வெளியே வருகின்றனர். பொது இடங்களில் கரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரையில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் கடற்கரைப் பகுதி மாநகராட்சியின் சார்பில் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பயன்படுத்தப்பட்ட முகக்கசவங்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு விஞ்ஞான முறையில் எரியூட்டப்படுகின்றன.
அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) ஆகியவற்றைப் பின்பற்றாத தனிநபர்களிடமிருந்து அபராதம், நிறுவனங்களின் மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் அரசின் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது ஏப்.1 முதல் அக்.03 வரை ரூ.2,40,86,009 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் வேலுமணி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், குளங்கள் பராமரிப்பு, குடிநீர் திட்டப்பணிகள், தெருவிளக்குகள் அமைத்தல், நபார்டு திட்டப்பணிகள் போன்ற பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வரும் திட்டங்களை விரைந்து முடிக்கவும், தொடங்க வேண்டிய திட்டங்களுக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டம், 14-வது மற்றும் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்தும், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ் 15 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைக் கட்ட பழுதடைந்த ஒன்றிய அலுவலகங்களை விரைந்து தேர்வு செய்யவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்தின் சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன் இணைப்பு, சிறப்புக் கடன் உதவி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் சுழல் நிதி வழங்க கூடுதல் இலக்கு நிர்ணயிக்கவும், கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்குத் தொடர்ந்து உபகரணங்கள் வழங்கிடவும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் உட்பட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT