Published : 05 Oct 2020 06:26 PM
Last Updated : 05 Oct 2020 06:26 PM
காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) இணைய வழியிலான 5 நாட்கள் கருத்தரங்கம் இன்று (அக்.5) தொடங்கியது.
என்ஐடியின் மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் துறை சார்பில், ஏஐசிடிஇயின் அடல் அகாடமி மூலம் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் தொடர்பாக இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.
என்ஐடி இயக்குநர் முனைவர் கே.சங்கரநாராயணசாமி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ''இதுவரை இந்நிறுவனத்தில் 45-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்று சூழலில் இணைய வழியிலான இக்கருத்தரங்கில் பங்கேற்க 185 பேர் பதிவு செய்துள்ளனர். இது நேரில் பங்கேற்பவர்களை விட அதிகம். மின்னாற்றல் வாகனங்களினால் நமது நாடு காற்று மாசு இல்லாத நாடாக மாற வழி ஏற்படும்'' என்றார்.
என்ஐடி பதிவாளர் முனைவர் ஜி.அகிலா கூறும்போது, ''மின்னியல் துறை மட்டுமல்லாது மற்ற துறைகளைச் சார்ந்தவர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயனடைய வேண்டும். இக்கருத்தரங்கில் 14-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்று, பயிற்சி அளிக்கின்றனர்'' என்றார்.
5 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கத்தில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 185 மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.தங்கவேலு வரவேற்றார். துறைத் தலைவர் முனைவர் டி.வெங்கடேசன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT