Published : 12 Sep 2015 07:52 AM
Last Updated : 12 Sep 2015 07:52 AM
குளத்தில் மீன்பாசி குத்தகை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட மோதல், 6 பேர் பலியானதற்கு காரணமாக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே கற்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முப்புலி மகன் கருப்பசாமி (38) என்பவரது ஆட்டோவில் அதே ஊரைச் சேர்ந்த வடகாசி மகன் மகேஷ் (35), அடிவெட்டி (60), மேலப்புதூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராமையா மகன் முருகன் (36), லாலாகுடியிருப்பை சேர்ந்த இசக்கியம்மாள் (70), செல்லப்பா மனைவி கனகு (45) ஆகியோர் நேற்றுமுன்தினம் பய ணித்தனர்.
விபத்தா? கொலையா?
செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புதூர் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் ஆட்டோவில் இருந்த 6 பேரும் பலியானார்கள். இது விபத்தா? திட்டமிட்ட கொலையா? என்பதில் போலீ ஸாரிடம் குழப்பம் நீடிக்கிறது. தப்பியோடிய லாரி ஓட்டுநர் திரு மலைக்குமார் பிடிபட்டால் மட்டுமே உண்மை தெரியவரும். அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் பலியான கருப்ப சாமி, அடிவெட்டி, மகேஷ் ஆகி யோரின் உறவினர்கள், `இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என்கின்றனர்.
லாபம் தரும் மீன் வளர்ப்பு
குளத்து மீன்கள் கிலோ ரூ.200 வரை விலைபோகிறது. ஒரு மீன் ஒன்றரை கிலோ அளவுக்கு வளரும். ஒரு ஏக்கர் பரப்புள்ள சிறிய குளத்தில் ஆண்டுக்கு 150 முதல் 200 கிலோ மீன் கிடைக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் சுரண்டை குளம் போன்ற பெரிய குளங்களில் மீன்பாசி குத்தகை ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் வரை ஏலம் போகிறது. அந்த அளவுக்கு லாபமும், போட்டியும் கொண்ட தொழிலாக இது இருக்கிறது.
குறிப்பாக வளமான செங் கோட்டை பகுதி குளங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். மீன் வளர்ப்புக்கு ஏற்ற இக்குளங்கள் ஏலத்தில் கடும் போட்டி இருக்கும். இப்போட்டியால் குளங்களில் விஷம் கலந்து மீன்களை சாகடிப் பது, திருட்டுத்தனமாக மடைகளை திறந்து தண்ணீரை வெளியேற்று வது போன்ற குற்றங்களால் மோதல்கள் ஏற்படுவது உண்டு.
கவுரவப் பிரச்சினை
கிராமங்களில் ஆண்டாண்டு காலமாக ஒரு குடும்பத்தினரே குளம் ஏலம் எடுப்பது என்பது கவுரவமாக கருதப்படுகிறது. அதற்கு பங்கம் விளையும்போது போட்டி, பொறாமை உருவெடுக்கிறது. மாவட்டத்தில் இதுபோன்ற கார ணங்களால் அடிதடி, வெட்டு, குத்து என்றுதான் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி வந்தன. தற்போது அது கொலை செய்யும் அளவுக்கு மாறியுள்ளதாக கருதப்படுகிறது.
அனந்தன்குளம் மோதல்
கற்குடி கிராமத்திலுள்ள ஒன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள அனந்தன் குளத்தை 20 ஆண்டுகளுக்கு மேலாக காளி என்பவர்தான் குத்தகைக்கு எடுத்துள்ளார். இவ் வாண்டு கற்குடி பகுதியிலுள்ள 28 குளங்களை செங்கோட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் மொத்தமாக குத்தகை எடுத்தார். அனந்தன் குளத்தை ஹரிஹரன் என்பவருக்கு அவர் உள்குத்தகை கொடுத்தார். குளம் குத்தகை கை மாறியதால் காளி, அவரது மகன்கள் லாரி ஓட்டுநர் திருமலைகுமார், பாலகிருஷ்ணன் தரப்புக்கும், ஹரிஹரன் தரப்புக்கும் இடையே மோதல் உருவானது.
குளத்தில் விஷம்
கடந்த 2 மாதங்களுக்குமுன் அனந்தன் குளத்தில் விஷம் கலந்து மீன்களை கொன்றதாக காளி தரப்பினரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ச்சியாக கடந்த மாதம் 8-ம் தேதி கற்குடியில் மோதல் மூண்டது. பாலகிருஷ்ணன் தாக்கப்பட்டார். ஹரிஹரனின் அண்ணன் மகேஷ், உறவினர் அடிவெட்டி, ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி (3 பேரும் தற்போது பலியானவர்கள்) மீது புளியரை போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இதுபோல் ஹரிஹரன் அளித்த புகாரின்பேரில், திருமலைக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறையில் இருந்த இவர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர். இதற்காக, புளி யரை போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட மகேஷ், அடிவெட்டி ஆகியோர், கருப்பசாமியின் ஆட்டோவில் சென்றபோதுதான் விபத்து நிகழ்ந்திருக்கிறது.
அசம்பாவிதங்களை தடுக்க கற்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீன்பாசி குத்தகை ஏல பிரச்சினை இப்போது கிராம மக்களை பிளவுபடுத்தியுள்ளது.
ஜாதி பிரச்சினை, மணல் கொள்ளை போன்ற காரணங் களால் தொடர் கொலைகள் நடைபெற்றுவந்த திருநெல்வேலி யில், தற்போது மீன்பாசி குத்தகை ஏல விவகாரமும் கொலைகளுக்கு காரணமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் பலியான 3 பேர் அப்பாவிகள்
ஆட்டோவில் பயணிகளாக சென்ற அப்பாவிகளான கனகு, இசக்கியம்மாள் ஆகியோர் அங்குள்ள தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு சென்றவர்கள். பலியான முருகன் (36) கோவையிலுள்ள ஷாமில்லில் பணிபுரிந்து வந்தார். 10 நாட்களுக்குமுன் ஊருக்கு வந்திருந்தார். தனது மகள்கள் மகாலட்சுமி, ரஞ்சனி ஆகியோரை பள்ளியில் விட்டுவிட்டு, ஆட்டோவில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT