Published : 05 Oct 2020 02:54 PM
Last Updated : 05 Oct 2020 02:54 PM
குன்னூர் மக்களின் குடிநீர்த் தேவையைப் போக்க அறிவிக்கப்பட்ட எமரால்டு குடிநீர்த் திட்டம், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள 30 வார்டுகளில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரத்துக்கான ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணை. 43.6 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை 1930-ல் 25 ஆயிரம் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யக் கட்டப்பட்டது. தற்போது குன்னூர் நகரின் மக்கள்தொகை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. இதைத் தவிர்த்து பந்துமி, ஜிம்கானா, கரடிபள்ளம் ஆகிய பிற நீராதாரங்கள் உள்ளன.
மழை பொய்த்துவிட்டால், வாரம் இரு முறை விநியோகிக்கப்படும் தண்ணீர் விநியோகம் வாரம் ஒரு முறையாகிவிடும். வறட்சிக் காலத்தில் தண்ணீர் விநியோகம் மாதம் இரு முறை அல்லது மாதம் ஒரு முறையாக மாறிவிடும் சூழலும் நிலவுகிறது.
எமரால்டு அணையிலிருந்து இணைப்பு
இந்நிலையில், அதிமுக அரசு கடந்த 2011-ல் பதவியேற்றதும் குன்னூர் நகரத்தின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய எமரால்டு அணையிலிருந்து குடிநீர் வழங்கப் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வடிகால் வாரியம் மூலம் எமரால்டு அணையிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம் குன்னூர் வரை குழாய்கள் அமைத்து, தினமும் 116 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் குன்னூர் நகராட்சி, முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் பாஸ்டியர் ஆய்வகமும் பயன்பெறும். நாள் ஒன்றுக்கு குன்னூர் நகராட்சிக்கு 51 லட்சம் லிட்டர், முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு 62.5 லட்சம் லிட்டர் மற்றும் பாஸ்டியர் ஆய்வகத்திற்கு 2.5 லட்சம் லிட்டர் நீர் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்டம் ரூ.95.38 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் குன்னூர் நகராட்சியின் பங்கு ரூ.40.19 கோடி, முப்படை அதிகாரிகள் கல்லூரியில் பங்கு ரூ.52.64 கோடி மற்றும் பாஸ்டியர் ஆய்வகத்தின் பங்கு ரூ.2.47 கோடி.
சோதனை ஓட்டம்
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த இந்தத் திட்டத்துக்கான டெண்டர் கடந்த 2016-ம் ஆண்டு முடிந்து, பணிகள் தொடங்கின. தண்ணீர் கொண்டு வருவதற்கான குழாய்கள் எமரால்டு முதல் குன்னூர் வரை பதிக்கப்பட்டன. தற்போது இந்தப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இன்று குன்னூர் பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனையாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.
இதில் குழாய்களில் உடைப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தபின் தண்ணீரை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்துத் தமிழ்நாடு வடிகால் வாரியப் பொறியாளர்கள் கூறும்போது, ''வனத்துறை அனுமதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் எமரால்டு குடிநீர்த் திட்டம் தாமதமானது. குடிநீர்க் குழாய்கள் பதிப்பு, நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், நீரேற்று நிலையங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் குன்னூர் நகரத்துக்கு விரைவில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT