Published : 05 Oct 2020 10:59 AM
Last Updated : 05 Oct 2020 10:59 AM
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட் டங்களில் பிரதமரின் கிசான் நிதியுதவி திட்ட முறைகேட்டில் ஒன்றியத்திற்கு 25 பேருக்கு தொடர்புஇருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எளிய விவசாயிகள் பயன் பெறும் வகையில் தொடங்கப்பட்டது ‘பிர தமரின் கிசான் நிதியுதவித் திட்டம்’. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வரவு வைக்கப்படும். இடையில், அதிக, கூடுதல் பயனாளிகள் சேருவதற்காக ஆன்லைன் மூலம் இத்திட்டத்தில் சேர தளர்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் அல்லாத பலர், போலிபயனாளிகளாக சேர்ந்து பயன் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி புதிதாக சேர்க்கப்பட்ட சுமார் 2 லட்சம் பயனாளிகளின் பட்டியலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இப்பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 10 ஆயிரம் பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரம்பேர் என மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் போலி பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந் தது. இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வங்கிக் கணக்கு மூலம் தலா ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளதும் தெரியவந்தது.
இவர்களில் இதுவரை 50 ஆயி ரம் பேரின் வங்கிக் கணக்கில் இருந்துரூ.12 கோடி திரும்பப் பெறப் பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில்போலியாக பணம் பெற்றவர்க ளுக்கு, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கப்பட்டு அவர்களின் ஊதியத்தை கிசான் நிதியில் வரவு வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதுவரை விழுப்புரம் மாவட் டத்தில் 3 வேளாண் உதவி அலுவலர்கள் உட்பட 15 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23 பேரும் சிபிசிஐடி போலீஸால் கைது செய் யப்பட்டுள்ளனர்.
முறைகேடு நடைபெற்றது எவ்வாறு
முறைகேடு எவ்வாறு நடைபெற்றது என சிபிசிஐடி போலீ ஸாரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது:
வட்டார வேளாண் அலுவலகங்களில் பணி புரியும் அலுவலர்கள் சிலர், அரசால் மானிய விலையில் விதைகள், வேளாண் கருவிகள் வழங்கும் திட்டத்திற்காக சுற்று வட்டார கிராமங்களில் சிலரை தேர்வு செய்துள்ளனர். அவர்கள் மூலம் போலி பயனாளிகளிடம் வசூல் வேட்டை நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா ஒரு ஒன்றியத்தில் மட்டுமே விசாரணை முடிந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் 12 ஒன்றியங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் இந்த முறைகேட்டில், தலா 25 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் விரைவில் கைதாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT