Published : 05 Oct 2020 07:53 AM
Last Updated : 05 Oct 2020 07:53 AM
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த 2011-ம் ஆண்டு முதல் 248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தவழக்குகளை தமிழக அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது.
ஆனாலும் இதுவரை 213 வழக்குகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எஞ்சி உள்ள 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்காலிக பணிக்கு செல்லும் மக்களுக்கு காவல்துறை தடையில்லா சான்றிதழ் வழங்குவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.
மேலும் வெளிநாடுகளுக்கு படிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் செல்ல பாஸ்போர்ட் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.
இந்நிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நடத்தினார். சுற்றுவட்டார கிராம மக்கள், கூடங்குளம் அணுமின் நிலைய உயர் அதிகாரிகள், ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளினால் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் இன்னல் பட்டு வருவதாகவும், மாநில அரசு வழக்குகளை வாபஸ் பெற்று விட்டதாக கூறினாலும், யார் மீது எந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன என்பது பற்றி தெளிவான கருத்துகள் இல்லை என்றும் கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த கூட்டத்துக்கு பின் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறும்போது, “கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதுபோடப்பட்ட வழக்கின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வேலைவாய்ப்பிற்காக வழங்கப்படும். ஊரடங்கு உத்தரவு காலத்தில் போடப்பட்ட வழக்குகளில் உள்ளவர்களுக்கும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும்.
பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் தேவைப்படுவோர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தால் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT