Published : 04 Oct 2020 01:07 PM
Last Updated : 04 Oct 2020 01:07 PM
உத்தரப்பிரதேச முதல்வர் பதவி விலக கோரி யோகி ஆதித்யநாத் உருவப்படத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எரித்தனர். இப்போராட்டத்தின் போது காவல் துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தலித் சிறுமி படுகொலை சம்பவத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய்நாத் பதவி விலகக்கோரி, புதுச்சேரி மாநில தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிரணி சார்பில் இன்று (அக். 4) கண்டன போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மகளிரணி தலைவி சுகந்தி தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
காமராஜர் சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் பலர் பங்கேற்று உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், உ.பி. முதல்வர் படத்தை எரித்தனர். அதனை காவல் துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
முன்னதாக, தலித் சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே எரித்ததை வெளிக்காட்டும் வகையில் போராட்டத்தின் போது மரக்கட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அதனை காவல் துறையினர் அகற்றினர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் விரோத பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நடைபெற்றுள்ளன. இப்பொழுதும் கூட ஒரு 19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.
அவரின் சடலத்தைக் கூட பெற்றோருக்குத் தராமல் உத்தரப்பிரதேச காவல்துறையே திருட்டுத்தனமாக எரித்து நீதியை படுகொலை செய்திருக்கிறது. அதை கண்டித்தும் அம்மாநிலத்தை ஆளும் முதல்வர் பதவி விலகக்கோரியும் போராட்டம் நடைபெற்றது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT