Published : 04 Oct 2020 12:41 PM
Last Updated : 04 Oct 2020 12:41 PM
தமிழக பேருந்துகள் புதுச்சேரிக்குள் வர அனுமதியில்லாததால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து யூபிஎஸ்சி தேர்வு எழுத வந்தோர் அவதியடைந்தனர். வாடகை கார், இருசக்கர வாகனங்களில் பலரும் வந்தனர். தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடு இருந்ததால் சாலையிலேயே பெற்றோர், குடும்பத்தினர் காலை முதல் காத்திருந்தனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகள்) முதல் நிலைத்தேர்வு இன்று (அக். 4) காலை தொடங்கியது.
காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறுகிறது.
சார்பு செயலாளர் ஜெய்சங்கர் உத்தரவில், "புதுச்சேரியில் 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் 3 மையங்களும், லாஸ்பேட்டை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திவீதியில் உள்ள பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி, அம்பேத்கர் சாலையில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாக்குமுடையான்பேட் இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் மையங்கள் உள்ளன. புதுவையில் தேர்வு எழுத 2,913 பேர் விண்ணப்பித்துள்ளனர். புதுவை மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தமிழக பேருந்துகள் புதுச்சேரிக்குள் வர அனுமதியில்லை. இதனால் புதுச்சேரி மையத்தில் தேர்வு எழுத விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திண்டிவனம் மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்தோர் வாடகைக்கோ, சொந்த காரிலோதான் வர முடிந்தது. பலர் இருசக்கர வாகனங்களிலும் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
மையத்துக்குத் தேர்வு நேரத்துக்கு பத்து நிமிடம் முன்பாக அனைவரும் வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் வந்தோரை அனுமதிக்கவில்லை. தேர்வு எழுத வந்தோர் முகக்கவசத்துடன் வந்திருந்தனர். அத்துடன் தேர்வு எழுத வந்தோர் தனியாக சானிடைசரை எடுத்து வந்திருந்தனர்.
தேர்வு மையத்தினுள் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு மையங்களை பார்வையிட்ட உதவி ஆட்சியர் சுதாகர் கூறுகையில், "கரோனா காலத்தில் நடப்பதால் தேர்வு மையங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. தேர்வு எழுத வந்தோருக்கு இடையிலும் போதிய இடைவெளி விடப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன" என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், தேர்வு மையங்களுக்கு வெளியே ஏராளமான பெற்றோர், குடும்பத்தினர் சாலையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் கூறுகையில், "விழுப்புரம், சிதம்பரம், திண்டிவனம், கடலூர் என தமிழகப்பகுதிகளில் இருந்து வருகிறோம். பேருந்துகள் புதுச்சேரிக்குள் வருவதற்கு அனுமதி இல்லாததால் வாடகை கார், இருசக்கர வாகனங்களில் தான் வந்தோம். காலையிலேயே வந்துவிட்டோம். வாகனங்களை சாலையில்தான் நிறுத்தியுள்ளோம். சாலையில்தான் மாலை வரை இருக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT