Published : 04 Oct 2020 12:03 PM
Last Updated : 04 Oct 2020 12:03 PM

இன்று அக்-4 உலக விலங்குகள் தினம்; வணிக நோக்கத்துக்காக நாய் விற்பது தடை செய்யப்படுமா?

தெருநாய்களை பராமரிக்கும் மாரிக்குமார். 

மதுரை

உலக சூழலியலுக்கு இயற்கை எவ்வளவு முக்கியமோ அதுபோல் இந்த பூமியில் வாழும் உயிரினங்களும் முக்கிய காரணியாக உள்ளன. இந்த இரண்டும் இணைந்த சூழல்தான் மனித வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த முடியும். ஆனால், இன்றைய கணிணி காலத்தில் இந்த இரண்டின் சூழலும் சரியாக இல்லை. அதனால், கரோனா வைரஸ் போன்ற இயற்கையை மீறிய கொடிய நோய்கள் பரவி உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

கடந்த அரை நூற்றாண்டாக மனிதர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக இயற்கையை அழித்ததால் கால்நடை வளர்ப்பு தொழில் அழிவின் விளிம்புக்கு சென்றது. சமீப காலமாக மனிதன் தன்னுடைய பொழுதுப்போக்குக்காக விலங்குகளை வதை செய்கிறான். இதை தடுத்து, விலங்குகளை பாதுகாத்து, அதன் உரிமைகளை நிலைநிறுத்தவும், மனிதன் மற்றும் விலங்குகள் இடையேயுள்ள ஒப்பற்ற உறவை கொண்டாடடும் வகையிலும் ஆண்டுதோறும் அக்டோபர் 4-ம் தேதி உலக விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த தினம், 'அனைத்து உயிர்களும் வாழ்வதற்குதான் இந்த பூமி' என்ற கருத்தை முன்நிறுத்திக் கொண்டாடப்படுகிறது.

இது குறித்து, மதுரை விலங்குகள் நல ஆர்வலர் மாரிக்குமார் கூறுகையில், "உலக வனவிலங்குகள் தினம் கொண்டாடுவதற்கு இத்தாலி நாட்டைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவர் மூலகாரணம். மனித இனமும், நாயும் என்ற புத்தகத்தை எழுதிய ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹீன்ரிச் ஜிம்மர் மேன் என்பவர்தான் உலகளவில் இந்த விலங்குகள் தினம் உலகளவில் கொண்டாடப்படுதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவர், 1925-ம் ஆண்டில் 5,000 பேரை திரட்டி இந்த பூமி எல்லா உயிர்களுக்குமானது என்று முதல் முதலில் குரல் கொடுத்தார்.

ஆனால், அவரின் குரல் தற்போது வரை நிறைவேறவில்லை என்பதுதான் உண்மை. மனிதர்களுக்கான இந்த உலகத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் பெரிய வணிகமாகி உள்ளது. இந்த வணிகம், ஒரு வகையில் விலங்குகளை வதை செய்வதுதான்.

ஒரு விலங்கின் இனவிருத்தி, இனப்பெருக்கம் இயற்கையாக நடக்க வேண்டும். உதாரணமாக நாய் விற்பனையை சொல்லலாம். செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் விற்பனை நமது நாட்டில் தற்போது அமோகமாக நடக்கிறது. இந்த நாய்களை விற்பனை செய்வோர், மிகப்பெரிய வணிக நோக்கில் செயற்கையான சூழலை ஏற்படுத்தி இனவிருத்தி செய்கின்றனர்.

நல்ல விலைக்கு வரக்கூடிய நாய் குட்டிகளை மட்டும் அவர்கள் விற்கின்றனர். மற்றவைகளை அழித்துவிடுகின்றனர் அல்லது தெருக்களில் விட்டுவிடுகின்றனர். அதனால், நாட்டு நாய்களைவிட கலப்பின இனப்பெருக்கத்தில் உருவாக்கப்பட்ட நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

பொதுவாக, ஒரு நாய் ஆண்டுக்கு ஒரு முறை குட்டி ஈன்றாலே பலவீனமாகிவிடும். ஆனால், தொடர்ந்து இயந்திரம் போல் அதை இனவிருத்திக்கு பயன்படுத்துகின்றனர். இது சட்டரீதியாக தவறு. மக்கள், வெளிநாட்டு இறக்குமதி நாய்களையும், கட்டாய செயற்கை இனவிருத்தி செய்யப்பட்ட கலப்பின நாய்களையும் கவுரவத்திற்காகவும், பொழுதுப்போக்குக்காகவும் வளர்க்க ஆரம்பித்ததால் இதுவரை காலம் காலமாக நம்மையும், நம் சூழலையும் பாதுகாத்து வந்த நாட்டின நாய்கள் தெரு நாய்களாக மாறிவிட்டன.

அந்நியர்களை தெருவுக்குள் வர விடாமல் பாதுகாக்கும் இந்த தெரு நாய் குரைத்தாலே நாய் தொல்லை என்று மக்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிடுகின்றனர். தெருவில் இருக்கக்கூடிய நாய்களை விஷம் வைத்துக் கொல்பவர்கள், கல்லால் அடிப்பவர்கள் தெருநாய்களை தொல்லை செய்வதாக மாநகராட்சியில் புகார் தெரிவித்து தியாகியாகிவிடுகின்றனர்.

ஆனால், நாள் முழுவதும் தெருக்களையும், அதில் வசிக்கும் மக்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் தெருநாய்களை மாநகராட்சி அதிகாரிகள் கிரிமினல் குற்றவாளிகள் போல் பிடித்து சென்றுவிடுகின்றனர். வணிக நோக்க செல்லப்பிராணி நாய்கள் வியாபாரத்தைத் தடை செய்தால் மக்கள் கடந்த காலத்தைப்போல் தங்கள் பாதுகாப்புக்காக வீதிகளில் உள்ள நாய்களை அரவணைப்பார்கள்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x