Published : 04 Oct 2020 10:10 AM
Last Updated : 04 Oct 2020 10:10 AM
மக்கள் நலன் கருதி சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய மேலும் தளர்வுகள் வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (அக். 4) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. தற்பொழுது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாராதார முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவற்றில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில், மக்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக பணிக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் சென்றுவர வசதியாக, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்து போக்குவரத்தை அனுமதித்துள்ளது. ஆனால், புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி அளிக்காத நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அத்தியவாசிய அரசு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு மின்சார ரயிலில் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானோர் புறநகர் மின்சார ரயிலில் தான் பயணம் செய்தனர். ஆனால், தற்பொழுது ஊரடங்கால் மின்சார ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் மிகவும் அவதியுறுகின்றனர். நோய் தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்காக அரசு பேருந்துகளும் எண்ணிக்கையில் குறைவாகவும், அதிக நேர இடைவெளியுடனே செயல்படுகிறது. இதனால் அலுவலக ஊழியர்கள் பெரும்பாலோனோர் பயணம் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆகவே, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அவரவர் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையுடன் வருபவர்களுக்கு மட்டும் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய, பயண சீட்டு வழங்க மத்திய ரயில்வேதுறை அனுமதி வழங்க வேண்டும். அதற்கு தமிழக அரசு சிறப்பு அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தரவேண்டும்.
இதனால், அரசு பேருந்தில் பயணம் செய்பவர்களின் நெருக்கடி குறையவும், நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் வழிவகுக்கும். மக்களும் குறித்த நேரத்தில் பணிக்கு சென்று வர ஏதுவாக இருக்கும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக இவற்றை கவனத்தில் கொண்டு மக்கள் நலன் கருதி சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய மேலும் தளர்வுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT