Published : 04 Oct 2020 07:39 AM
Last Updated : 04 Oct 2020 07:39 AM

2.5 லட்சம் கரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயன்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை

கரோனா காலத்தில் மட்டும் 2.5 லட்சம் கரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடந்த 108 ஆம்புலன்ஸ் வேலை|வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

2 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு தலா 400 பேர் வீதம் மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கெனவே 1,000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரூ.103 கோடியில் கூடுதலாக 500 ஆம்புலன்ஸ்களை வாங்குவதற்கு முதல்வர் அண்மையில் உத்தரவிட்டார். அதில், முதல் கட்டமாக 108 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு வாரங்களில் மேலும்100 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு வரும்.

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இதன்மூலம் தினமும் 4 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கரோனா காலத்தில் மட்டும் 2.50 லட்சம் கரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதேபோன்று 5.50 லட்சம் பேர் பிறசேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர் என்றார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இலுப்பூர் அருகே பாக்குடியில் முகக்கவசம் அணியாமல் பணிக்கு சென்ற தொழிலாளர்களுக்கு அவர் இலவச முகக்கவசங்களை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x