Published : 04 Oct 2020 07:24 AM
Last Updated : 04 Oct 2020 07:24 AM
முகநூல், வாட்ஸ்அப்பில் சேலை, நகை விளம்பரங்கள் கொடுத்து 800 பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். ஆடைகள் தொடர்பாக முகநூலில் வந்த விளம்பரங்களை பார்வையிட்ட இவர், தனக்கு பிடித்த ஆடைகள் குறித்த விவரங்களைத் தேடியுள்ளார். சிறிது நேரத்தில், ‘SALE’ என்ற வாட்ஸ்அப் குழுவில் அவரது கைபேசி எண் இணைக்கப்பட்டு, ஆடைகள் தொடர்பாக ஏராளமான விளம்பரங்களும் அதில் வந்துள்ளன.
பின்னர், அக்குழுவின் பொறுப்பாளரான (அட்மின்) தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தன்னிடம் தரமான துணிகள், வளையல்கள் குறைந்த விலையில் கிடைப்பதாகவும், வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் வீட்டுக்கு கூரியரில் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.
அக்குழுவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருந்ததால் நம்பிக்கை அடைந்த இந்திராவும், தனக்குப் பிடித்த ஆடையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய சிறிது நேரத்தில், அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து இந்திராவின் பெயர் நீக்கப்பட்டது. ராஜேந்திரனையும் கைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, சைபர் கிரைம் போலீஸில் இந்திரா புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு, ராஜேந்திரனை கைது செய்தனர். இதுபோல, சுமார் 800 பெண்களிடம் அவர் பல லட்சம் ரூபாய் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT