Published : 03 Oct 2020 05:32 PM
Last Updated : 03 Oct 2020 05:32 PM

திருப்பத்தூர் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் கரோனா நோயாளிகளின் மனதை ஆசுவாசப்படுத்தும் நூலகம்

திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தொடங்கிய சிறிய நூலகத்தில் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் செல்லும் நோயாளிகள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் மனதை ஆசுவாசப்படுத்தும் புத்தகங்களுடன் சிறிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5,000-ஐக் கடந்துள்ள நிலையில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா சிகிச்சையில் திருப்பத்தூரில் செயல்படும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.

60 படுக்கை வசதிகள்

சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் 60 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. இங்கு கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சித்த மருந்துகள் தொடர்பான விவரங்களை ஆய்வுக்காகப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு மைய வளாகத்திலே உணவு சமைத்து வழங்குவதுடன் மண்பானை உணவுகள், மூலிகை சூப், ஆவி பிடித்தல், யோகா பயிற்சிகள், காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சியும் இரவில் பஃபே முறையில் நிலாச்சோறு, விளையாட்டுடன் வீடியோ படக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் நோயாளிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதுடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

சிறிய நூலகம்

சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் மற்றுமொரு முன் முயற்சியாக சிறிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர். இங்கு சிகிச்சை பெறுபவர்கள் மத்தியில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக ஆட்சியர் சிவன் அருள் பரிந்துரையின் பேரில் இந்த நூலகத்தைத் தொடங்கியுள்ளனர். சமையல் குறிப்புகள், மருத்துவ நூல்கள், சிறுவர்களுக்கான கதைகள், சுற்றுச்சூழல் என 70-க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சித்த மருத்துவ மையத்தின் மருத்துவர் விக்ரம்குமார் கூறும்போது, "இந்த சித்த மருத்துவ மையத்தில் இதுவரை 393 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 55 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெறுபவர்களின் மனதை ஆசுவாசப்படுத்தவும், இங்கிருக்கும் நாட்கள் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த நூலகத்தைத் தொடங்கி உள்ளோம். புத்தகங்களின் பயன்களை எடுத்துக் கூறியதும் கிட்டத்தட்ட ஐம்பது பயனாளர்கள் உடனடியாக ஏதாவதொரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு சென்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x