Published : 03 Oct 2020 05:16 PM
Last Updated : 03 Oct 2020 05:16 PM
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவமனையில் 250 பேருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் பித்தக் குழாய் கற்கள் அகற்றப்பட்டுள்ளன.
கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், பித்தப்பையில் (Gall bladder) சேகரிக்கப்பட்டு, பின்பித்தக்குழாய் வழியாக நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கிறது. இந்நிலையில், பித்தப்பையில் உருவாகி பித்தக் குழாயை அடைக்கும் கற்கள், பித்தக் குழாய் கட்டிகள் மற்றும் கணையம் கெட்டுப்போவதால், பித்தம் வெளியேறும் குழாயில் சிலருக்கு அடைப்பு ஏற்படுகிறது. அப்போது பித்தமானது குடலுக்கு வராமல் பித்தப்பையிலும், கல்லீரலிலும் தேங்கிவிடும்.
இதன் காரணமாக நாளடைவில் கிருமித் தாக்கம் ஏற்பட்டு, பின்னர் உடல் முழுவதும் கிருமி பரவத் தொடங்கி மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மஞ்சள்காமாலை, குளிர் காய்ச்சல் ஏற்படும். வயிற்றின் வலதுபுறத்தின் மேல்பாகத்தில் விட்டுவிட்டு கடுமையான வலி இருக்கும்.
இவ்வாறு பித்தக் குழாயில் கல் பாதிப்பு இருந்த 250 பேருக்கு சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவமனையில் பித்தக் குழாய் கற்கள் அகற்றப்பட்டுள்ளன. சுமார் 50 பேருக்கு பித்தக் குழாய் அடைப்பைச் சரிசெய்ய 'மெட்டல் ஸ்டென்ட்' பொருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனையின் இரைப்பை, குடல், கல்லீரல் துறை உதவிப் பேராசியர் வி.அருள்செல்வன் கூறுகையில், "பித்தக் குழாய் கல் அடைப்புப் பிரச்சினையை தொடக்க நிலையிலேயே பரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதாக குணமாக்கலாம். பித்தக் குழாயில் கல் இருந்தால் அதை எண்டோஸ்கோப்பி மூலம் அகற்றி எடுத்துவிட்டு (இஆர்சிபி), ஸ்டென்ட் பொருத்தி பித்தநீர் வெளியேற வழிவகை செய்கிறோம்.
பித்தப்பை குழாயில் இருந்த கல் அகற்றிய சில நாட்களுக்குப் பிறகு லேப்ரோஸ்கோப்பி மூலம் கற்களுடன் கூடிய பித்தப்பையையும் அகற்றுகிறோம். இதன்மூலம், மீண்டும் மீண்டும் கல்லால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். பித்தக் குழாயில் நாள்பட்ட புற்றுநோய் கட்டி இருந்தால், 'மெட்டல் ஸ்டென்ட்' பொருத்தி அடைப்பைச் சரிசெய்கிறோம்.
இலவச சிகிச்சை
பித்தக் குழாயில் கல் இருந்தால் அதை அகற்ற தனியார் மருத்துவமனைகளில் ரூ.70 ஆயிரம் வரை செலவாகும். அதேபோல, பித்தக் குழாய் அடைப்பை நீக்க 'மெட்டல் ஸ்டென்ட்' பொருத்த, சிகிச்சை செலவுகளை உட்பட ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்தச் சிகிச்சைகள் அனைத்தையும் இலவசமாக மேற்கொள்கிறோம்.
பித்தப்பை, பித்தக் குழாயில் கல் வர அதிக கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவை முக்கியக் காரணமாகும். 25 வயது முதல் 40 வயது வரையுள்ள பெண்களுக்குப் பித்தப்பையில் கற்கள் வர வாய்ப்புகள் உள்ளன. அதிலும் உடல் பருமனான பெண்கள், கர்ப்பிணிகளுக்கு வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT