Last Updated : 03 Oct, 2020 04:45 PM

1  

Published : 03 Oct 2020 04:45 PM
Last Updated : 03 Oct 2020 04:45 PM

மறைந்து போன பாரம்பரிய தின்பண்டங்கள் மீட்டெடுப்பு: தேனியில் களைகட்டும் விற்பனை- நனவாகி வரும் நினைவுகள்

தேனி

வெளிநாட்டு சாக்லேட் வகைகளுக்குப் போட்டியாக பாரம்பரிய தின்பண்டங்கள் விற்பனை, சந்தையில் அதிகரித்து உள்ளது. இது ‘அந்தக்கால’ குழந்தைகளை உற்சாகப்படுத்தி வருகிறது.

கடந்த தலைமுறையினரின் தின்பண்டங்கள் ரசாயனக் கலப்பின்றி இருந்ததுடன் உடலுக்கு வலு சேர்க்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டன. குறிப்பாக அன்றைய சிறுவர், சிறுமியர்களை கவர ஏராளமான இனிப்பு வகைகள் விதவிதமாக உருவாக்கப்பட்டன.

வெல்லம் கலந்த படிக்கல்மிட்டாய், அரிசி மாவினால் தயாரிக்கப்பட்ட பேப்பர் அப்பளம், வெடிமிட்டாய், நூலை சுழற்றி விளையாடும் சக்கர மிட்டாய், கமர்கட், காசு மிட்டாய் (நாணயம் வைக்கப்பட்டிருக்கும்), குச்சிமிட்டாய், ஜவ்வுமிட்டாய், தேன்மிட்டாய் என்று ஏராளமான தின்பண்டங்கள் அன்றைய எய்ட்டீஸ், நைட்டீஸ் குழந்தைகளை குதூகலிக்க வைத்தது.

வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் இப்பொருட்களின் விற்பனை வெகுவாய் தடுமாறத் துவங்கியது. பலம் வாய்ந்த நிறுவனங்கள் முன்பு இந்த குடிசைத் தொழில் படிப்படியாக மறைந்தன. இதனால் 50க்கும் மேற்பட்ட தின்பண்ட தயாரிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன.

எனவே கடந்த தலைமுறையினரின் மலரும் நினைவுகளாகவே இவை இருந்து வருகின்றன. மீண்டும் பாரம்பரிய தின்பண்டங்களை மீட்டெடுக்கும் வகையில் தேனியில் இதற்கென சிறப்பு கடைகள் உருவாகி வருகின்றன.

தேனி பத்திரப்பதிவு பழைய அலுவலகம் அருகில் இதற்கென பிரத்தேய கடையை துவக்கி இருக்கும் வள்ளிக்கண்ணன் கூறுகையில், "கடந்த தலைமுறையினர் சுவைத்து மகிழ்ந்த தின்பண்டங்கள் பல மறைந்து விட்டன. இவற்றை மீண்டும் சந்தைப்படுத்தி வருகிறோம். ஏறத்தாழ 102 வகைகளில் 67வகையான இனிப்புகளை விற்பனை செய்கிறோம்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பொருட்கள் வெவ்வேறு பகுதியில் தயாரிக்கப்படுகிறது. இவற்றை விசாரித்து, சமூகவலைதளங்களில் தேடி இந்தப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளோம்.

ரூ.1முதல் ரூ.10வரை இப்பொருட்கள் விற்கப்படுகின்றன. விரைவிலேயே காம்போ பேக்கில் அனைத்து வகை மிட்டாய்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளோம்" என்றார்.

இதுபோன்ற பொருட்கள் தற்போது தேனி மாவட்டத்தில் அதிகளவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைப் பருவத்தில் சுவைத்து மலரும் நினைவுகளாக மறைந்து போன பல்வேறு தின்பண்டங்கள் தற்போது விற்பனை செய்யப்படுவது பலரையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x