Published : 03 Oct 2020 02:58 PM
Last Updated : 03 Oct 2020 02:58 PM

விவசாயிகளைக் குழப்பி குளிர்காய நினைக்கும் ஸ்டாலின் முயற்சி பலிக்காது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை 

அப்பாவி விவசாயிகளைக் குழப்பி குளிர்காய நினைக்கும் ஸ்டாலின் முயற்சி ஒருநாளும் பலிக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனை கழக அம்மா பேரவை செயலாளர் மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆணைக்கிணங்க தமிழகத்திலுள்ள 12,524 கிராமங்களிலும் அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இங்கே உறுப்பினராக இணையும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை இந்த இயக்கத்தில் அர்ப்பணித்து வருகின்றனர்

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நமது முதல்வர் வழங்கி வருகிறார். அவருக்கு துணை முதல்வர் பக்கபலமாக இருந்து வருகிறார்

கரோனா காலத்தில் முதல் ஊரடங்கின்போது, விவசாயிகளுக்கு பல்வேறு தளர்வுகளை செய்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எளிதில் சந்தைப்படுத்தும் வண்ணம் பல்வேறு திட்டங்களை முதல்வர் வகுத்துத் தந்தார்.

அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று ஒரு கிலோ உணவு பொருட்கள் கூட வீணாகாமல் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்திக் கொண்டனர்

விவசாயிகள் உயர்வு நாட்டுயர்வு என்ற முதல்வரின் உயரிய சிந்தனையால் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து 100 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. அதன் மூலம் மத்திய அரசிடம் விருது பெற்றுள்ளது என்பதை விவசாய மக்கள் நன்கு அறிவர்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 1,433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,278 ஏரி கண்மாய்களை புனரமைப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் நிலத்தடி நீர் உயர செய்து நீர் மேலாண்மையில் மாபெரும் புரட்சியை முதல்வர் செய்தார்.

தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. முதல்வரின் குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 4,12,000 ஏக்கர் நிலங்கள் குறுவை வேளாண் பணிகள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களை ஆராய்ந்து இதன் மூலம் விவசாய மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது மாறாக விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சியின் போது விவசாயிகளை காத்திட முடியும், விலை உயரும் பொழுது குறிப்பிட்டதற்கு மேல் விலை ஏறினால் அந்த லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கும் இன்று தெளிவான விளக்கத்தை என்று விவசாய மக்களுக்கு எடுத்துரைத்து தானும் ஒரு விவசாயி தான் என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்.

ஆனால் இன்றைக்கு வேளாண் மசோதா நன்மையை ஆராயமல் இந்தத் திட்டத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஸ்டாலின் பேசி வருவதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை

கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்காத திமுக உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தைக் கூட்டி ஒரு போலியான கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருப்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.

காவிரி டெல்டா பகுதியில் உள்ள நிலங்களில் சேற்றில் கால் வைத்து முதல்வர் நடவு நட்ட ராசியால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இருமடங்கு உற்பத்தி அதிகமானது என்று விவசாய மக்கள் மனம் குளிர்ந்து பாராட்டுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

தற்பொழுது வேளாண் சட்ட மசோதாவில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிந்தும் ஸ்டாலின் அரசியல் நாடகத்திற்காக அப்பாவி விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் குளிர்காய முயற்சிக்கிறார் அது ஒரு போதும் நடக்காது

ஏனென்றால் திமுக மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த போதும், தமிழகத்தில் ஆட்சி செய்த போதும் திமுக விவசாயிகளுக்கு செய்த துரோகத்தை ஒருநாளும் மறக்க முடியாது

காவேரி, முல்லை பெரியார் போன்ற ஜீவாதார பிரச்சினைகளில் தங்கள் சுயநலத்துக்காக தாரை வார்த்தும், விளைநிலங்களை பாதிக்கும் மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திட்டு துரோகம் செய்ததை விவசாய மக்கள் இன்றும் மறக்க மாட்டார்கள்

விவசாயிகள் பாதுகாவலராக திகழும் தமிழக அரசு காவிரி மற்றும் முல்லைப்பெரியாறில் தமிழகத்தில் இழந்த உரிமையை மீட்டது மட்டுமல்லாது விளை நிலங்கள் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கபட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்து ஒட்டுமொத்த விவசாயிகள் மனதை குளிரச் செய்தார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் இதற்கு நமது துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்தார்

அதுமட்டுமில்லாது கிராம வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என்பதை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டும் வண்ணம் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடு வழங்கும் திட்டம் மற்றும் இந்தியாவிலேயே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பாக செயல்பட்டு இதன் மூலம் 13 தேசிய விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x