Last Updated : 29 Sep, 2015 04:11 PM

 

Published : 29 Sep 2015 04:11 PM
Last Updated : 29 Sep 2015 04:11 PM

வினோத தோல் நோயால் அவதியுறும் இருவர்: உரிய நடவடிக்கைக்காக காத்திருப்பு

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமுக்கு திரளானோர் வந்திருந்தனர். அவர்களில் இருவரது நிலைமை, பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி வந்த பிற மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தொட்டியம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் மருதைவீரன்- கோகிலா தம்பதி. என்ன செய்தோமோ எங்கள் குழந்தை இந்த பாடுபடுவதற்கு என்று புலம்புகின்றனர் இவர்கள். இவர்களுக்கு 2005-ல், முற்றிலும் உடல் முழுவதும் தோல் நோய் பாதிப்புடன் முதல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாம்.

அதைத் தொடர்ந்து 2007-ல் 2-வதாக பிறந்த பெண் குழந்தை அகல்யா, வழக்கமான குழந்தையைப்போல தற்போது 4-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால், அதன்பிறகு 2010-ல் பிறந்த ஆண் குழந்தை விஷால், முதலாவதாக பிறந்த குழந்தையைப்போலவே உடல் முழுவதும் தோல் நோய் பாதிப்புடன் பிறந்தது. பல இடங்களில் சிகிச்சை அளித்தும் நோய் பாதிப்பு குறையக்கூட இல்லை.

தற்போது 5 வயதாகும் விஷால், வேறு குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட முடியாத நிலையில் தனிமைச் சிறையில் இருப்பதுபோல வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இவரை மாற்றுத் திறனாளி பட்டியலில் சேர்க்க மனு அளித்தபோது, தோல் நோய் பாதிப்பு மாற்றுத் திறனாளி பட்டியலில் வராது என்று கைவிரித்து விட்டனராம். எனவே, இவரை மாற்றுத் திறனாளி பட்டியலில் சிறப்பு உத்தரவு பிறப்பித்து சேர்த்து அதற்கான பயன்களை வழங்கவும், சிகிச்சை அளிக்கவும் ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

ஆட்சியர், தற்போது வரை சிகிச்சைக்கு செலவு செய்த தொகையை அளிக்கவும், தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாராம்.

திருச்சி இனாம்குளத்தூரைச் சேர்ந்தவர் அஜ்மீர் கான் (30). முகம் உட்பட உடல் முழுவதும் சிறிய, பெரிய கட்டிகள் முளைத்து பாதிக்கப்பட்டுள்ள இவர், தந்தையை இழந்து, தனது தாயுடன் உறவினர் உதவியுடன் வாழ்க்கையை கழித்து வருகிறார்.

உடல் அமைப்பு மாறுபாட்டால் வெளியிடங்களில் அவரை வேற்று கிரகவாசிபோல பார்ப்பதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் கண் கலங்குகிறார் அஜ்மீர் கான்.

தன்னைக் கண்டு பிறர் முகம் சுளிப்பதைத் தவிர்ப்பதற்காகவே, வெளியிடங்களுக்கு வராமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க வேண்டியதாக உள்ளது என்கிறார் அவர். எந்தவொரு சிறிய வேலையையும்கூட அவருக்கு வழங்க சமூகத்தில் யாரும் தயாராக இல்லை. சொந்தமாக தொழில் தொடங்க நிதி வசதியும் இல்லை. தொடங்கினால் சமூகம் அவரிடம் வியாபாரம் செய்யுமா என்ற அச்சமும் அவருக்கு உள்ளது. வருமானத்துக்கு வழியில்லாததால், அரசு உதவி கிடைத்தாலாவது சற்று ஆறுதலாக இருக்கும் என்றெண்ணி பல மாதங்களாக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தும் அலுவலர்களின் பல்வகை பதில்களைத் தவிர அவருக்கு எந்த வகையிலான ஆறுதலும் கிடைக்கவில்லை.

தன்னை மாற்றுத் திறனாளியாகக் கருதி மாத உதவித்தொகை அளிக்க வேண்டும் என்பது அவரது பிரதான முதல் கோரிக்கை. இதற்காக சமூக நலத் துறையை அணுகியபோது, இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத் திறனாளி பட்டியலில் இல்லை என்று கூறுகிறார்களாம்.

எனவே, கடைசி முயற்சியாக மாவட்ட ஆட்சியரை நம்பியுள்ள அவர், மாற்றுத் திறனாளி பட்டியலில் தன்னை சிறப்பு உத்தரவு பிறப்பித்து இணைத்து, மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்கிறார் அஜ்மீர் கான்.

தங்கள் குழந்தையின் நிலையை எண்ணி மனம் குமுறும் மருதைவீரன்- கோகிலா ஆகியோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விஷால் விஷயத்திலும், அஜ்மீர் கான் விஷயத்திலும் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி உரிய சிகிச்சை அளிக்கவும், அதுவரை மாற்றுத் திறனாளி பட்டியலில் சேர்த்து பலன்கள் கிடைக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x