Last Updated : 02 Oct, 2020 09:50 PM

 

Published : 02 Oct 2020 09:50 PM
Last Updated : 02 Oct 2020 09:50 PM

இளம்பெண் பலாத்கார கொலை; உ.பி. முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல் 

புதுச்சேரி

கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண் சம்பவத்துக்கு உ.பி. முதலவர் ஆதித்யநாத் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று(அக் 2) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘நாட்டில் மக்கள் சுதந்திரமாக பேச முடியவில்லை. அரசியல் கட்சிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. சாதாரண நடுத்தர மக்கள் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை பற்றி அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினால் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு எந்தவொரு சுதந்திரமும் இல்லை. பாஜக கட்சியினரால் தலித், சிறுபான்மை மற்றும் மழைவாழ் மக்கள் தாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தினர் இறைச்சி கொண்டு சென்றால் வெட்டிக்கொல்லப்படுகிறார்கள். தலித் சமுதாயத்தினர் உரிமைக்காக போராடினால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் இந்தியாவை உலுக்கி உள்ளது. தலித் இனத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டுப்பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை மூடி மறைக்கும் வேலையை அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளனர். ராகுல் காந்தியை போலீஸார் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு அராஜக செயலை உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு செய்துள்ளது.

ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களை தனிநபர் சந்தித்து ஆறுதல் கூற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் உரிமை உள்ளது. இதற்கு பின்னணியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு உள்ளது. இந்திய நாட்டில் சுதந்திரமில்லாத நிலையை மோடி அரசு செய்கிறது. பிரதமர் மோடி ஹிட்லரை போல் நடந்து வருகிறார். அதை தடுத்து நிறுத்தும் சக்தி மதசார்பற்ற கட்சிகளுக்கு தான் உள்ளது.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதா, நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மீனவர்கள் பிரச்சினை என மக்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு மாநிலத்தின் அதிகாரங்களை பறித்து வருகிறது. நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எதிர்கால சமுதாயத்துக்காகவும், ஜனநாயக உரிமைகளை காக்கவும் மத்திய அரசை எதிர்த்து போராடினால் மட்டுமே அடைய முடியும். புதுச்சேரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பல்வேறு இடையூறு நடந்தது. இதனை மீறி விதிமுறைகளுக்கு உட்பட்டு உண்ணாவிரதம் நடத்தி உள்ளோம்’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x