Published : 02 Oct 2020 07:48 PM
Last Updated : 02 Oct 2020 07:48 PM
80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்கக்கோரியும், தேர்ச்சியில் வெற்றி பெற்ற தங்கள் சான்றிதழை வாழ்நாள் சான்றிதழாக அறிவிக்க வேண்டும் எனப்போராடும் அவர்களின் கோரிக்கை திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் முகநூலில் இன்று பதிவு செய்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு:
“அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற வலியுறுத்தி, ‘நீட் தேர்வுக் கொடுமையால் மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக் கண்டித்து’ பணியிலிருந்து விலகிய ஆசிரியர் சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோரிக்கை நியாயமானது என்றாலும், அதிமுக ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக வழியில் அமையும் திமுக ஆட்சியில், 80,000 ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதியினை அளிக்கிறேன், போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT