Published : 02 Oct 2020 07:46 PM
Last Updated : 02 Oct 2020 07:46 PM
கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து இரு கண் பார்வையும் இழந்த இளைஞருக்கு அவரது பார்வையை மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
கடந்த 10 மாதம் முன் மதுரையை சேர்ந்த 22 வயது ஜான் மோசஸ், என்ற இளைஞர் இரு கண் பார்வை திறனை முற்றிலும் இழந்தநிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் இந்த இளைஞருக்கு கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்தும் அது வெற்றிகரமாக இல்லை என்பதால் அவரால் மீண்டும் பார்வை பெற முடியவில்லை. தனியார் மருத்துவமனை கைவிட்டநிலையிலே இந்த இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை மதுரை அரசு மருத்துவமனை கண் மருத்துவர்கள் முழுமையான கண் பரிசோதனைகளை செய்தனர். இதில், அவரது கண்களில் கிருஷ்ண படலம் பிறவியிலே முழுமையாக இல்லாததது தெரியவந்தது. இந்நிலையில் வெறுமனே ஒளி உணர்திறன் மட்டுமே அவருக்கு இருந்தது.
மீண்டும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதற்கான சாதக, பாதக அம்சங்கள் குறித்து மருத்துவர்கள், அந்த இளைஞருக்கு விளக்கு கூறினர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தப்பின் சாலை விபத்தில் மரணமடைந்த மற்றொரு இளைஞரின் கருவிழி தானமாக பெறப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் எவ்வித சிக்கலும் இல்லாமல் மருத்துவர்கள் கலைச்செல்வி, பர்வதசுந்தரி மற்றும் மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.
தற்போது நோயாளி கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குபின்னர் எந்த தொந்தரவும் இல்லாமல் நலமுடன் உள்ளார். பிறர் துணையின்றி அவரது வேலைகளை அவரே செய்யும் அளவிற்கு பார்வைதிறன் பெற்றுார். இந்த சிகிச்சை கருவிழி மீட்டெடுப்பு திட்டத்தின் உதவியால் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது. இரு கண் பார்வையும் இழந்த இளைஞருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பார்வையை மீண்டும் மீட்டுக்கொடுத்த மருத்துவர்களை டீன் சங்குமணி பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT