Published : 02 Oct 2020 07:25 PM
Last Updated : 02 Oct 2020 07:25 PM
சங்கரன்கோவிலில் மியாவாகி சிறுவனம் உருவாக்க மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
தென்காசி ஆசாத் நகரில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ப்ராணா மரம் வளர் அமைப்பினர் அனுமதி பெற்று மியாகாகி சிறு வனத்தை உருவாக்கியுள்ளனர்.
இங்கு நடப்பட்ட மரக்கன்றுகள் 3 ஆண்டுகளில் அடர் வனமாக உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆயிரப்பேரி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் அருகே சிற்றாற்று படுகையில் மற்றொரு மியாவாகி சிறு வனத்தை உருவாக்க பணிகளை செய்து வருகின்றனர். கட்டிடக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கருவேலமரங்கள் சூழ்ந்து காணப்பட்ட இடத்தில் பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற்று, இடத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் நகராட்சியுடன் இணைந்து மியாகாகி சிறு வனத்தை உருவாக்க மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. மீரான்சேட் காலனியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 600 மரக்கன்றுகள் நடும் பணியை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நகராட்சி வழங்கிய இயற்கை உரங்களை இட்டு, மரக்கன்றுகள் நடும் பணியில் ப்ராணா மரம் வளர் அமைப்பினர் ஏராளமானோர் ஈடுபட்டனர். இதுகுறித்து ப்ராணா மரம் வளர் அமைப்பினர் கூறும்போது, “சங்கரன்கோவிலில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் வேம்பு, அரசு, புளி, மருது, மிருதாணி, பாக்கு, இலவு, அரளி, ஆடாதொடா, நொச்சி, மூங்கில், சரக்கொன்றை, சீதா, நெல்லி, காட்டு நெல்லி, பூவரசு, மாதுளை, வேம்பு, வாகை உள்ளிட்ட 40 வகையான மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
சுமார் 600 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த பணி ஓரிரு நாட்கள் நடைபெறும். மியாவாகி முறையில் அடர்த்தியாக மரக்கன்றுகள் நடுவதால் மரங்கள் போட்டி போட்டு வளர்ந்து சில ஆண்டுகளில் அடர் வனமாக மாறிவிடுகின்றன. இது மிகுந்த பயனைத் தருகிறது. இயற்கையை மீட்டெடுக்க அனைத்து பகுதிகளிலும் மியாவாகி அடர்வனம் உருவாக்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். அரசும் இதற்கு ஒத்துழைப்பு அளித்து ஊக்கம் அளித்தால் அடர்வனங்ளை அதிக அளவில் உருவாக்கலாம் என்று ப்ராணா மரம் வளர் அமைப்பினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT