Published : 02 Oct 2020 07:21 PM
Last Updated : 02 Oct 2020 07:21 PM

கோவையில் ரூ.1.8 கோடி மதிப்பிலான கதர் கிராமப் பொருட்கள் விற்பனை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.1.79 கோடி மதிப்பிலான கதர் கிராமப் பொருட்கள் விற்பனை நடந்துள்ளது. காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கோவை கதர் அங்காடியில் சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த அமைச்சர் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதனைத் தெரிவித்தார்.

கோவை நகரின் நடுமையமாக விளங்கும் அவினாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில், இன்று (02.10.2020) காந்தியடிகளின் 152-வது பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனைத் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு இங்குள்ள காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, எம்.எல்.ஏக்கள் கோவை தெற்கு அம்மன் கே.அர்ச்சுனன், பல்லடம் வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) கிரிஅய்யப்பன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது.

''இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும், தன் வாழ்கையினையே அர்ப்பணித்தவர் காந்தியடிகள். அவர் நமது நாட்டிலுள்ள இளைஞர் சக்தியினை ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்தவும், சுயதொழில் செய்து நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கதர் கிராமத் தொழில் என்ற அமைப்பினை உருவாக்கினார். இதன் மூலம் நமது மக்களின் உடைத் தேவைகளைக் கிராம மக்களே உற்பத்தி செய்துகொண்டனர்.

அவ்வாறு தொடங்கப்பட்ட கதர் மற்றும் கிராமத் தொழில்கள் இன்று இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரந்து விரிந்து பலகோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெருமளவில் வழங்கும் வகையில் பருத்தி நூல் உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் கிடைக்கும் நூலினைக் கொண்டு பெருமளவு எண்ணிக்கைகளில் நெசவாளத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திற்கு 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.2.57 கோடி கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் ரூ.1.79 கோடி மதிப்பிற்கு கதர் மற்றும் கிராமப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதமாகவும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமாகவும் சிறப்புத் தள்ளுபடியினை அரசு அளித்துள்ளது. அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், தொழிலாளர்களும் மற்றும் பொது மக்களும் கதர்த் துணி ரகங்களை பெருமளவில் வாங்கி, காந்திஜியின் கனவுகளை நனவாக்கும் பொருட்டும், நாட்டின் நலன் கருதியும் நலிவடைந்த கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவினை வழங்கிட வேண்டும்

மேலும், கோவை மாவட்டத்தில் கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தடுப்பு (கோவிட்-19) நிவாரணத் தொகையாக ஒரு நபர்க்கு ரூ.1000 வீதம் 68 நபர்களுக்கு இருமுறை 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்காலப் பராமரிப்பு உதவித் தொகையாக 2019-2020ஆம் ஆண்டிற்கு தலா ரூ.5000 வீதம் 314 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தவிர, கதர் நூற்போர் நெசவாளர் நலவாரியம் மூலம், கதர் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்களில் பணியாற்றும் நூற்பாளர், நெசவாளர்களின் குடும்பத்திற்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து, இயற்கை மரணம் ஆகியவற்றிற்கு உதவித் தொகைகளும், முதியோர் ஓய்வூதியமும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றது''

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

‘கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றில் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு பதினைந்து தற்காலிகக் கதர் விற்பனை நிலையங்கள் அமைத்துக் கதர் விற்பனை செய்யப்பட உள்ளது. மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதை நெசவு செய்யும் ஏழை எளிய மக்களின் வாழ்வு ஏற்றம் பெறத்துணை புரிய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்!’ என்று கதரங்காடி மையத்தினர் வேண்டுகோள் வைக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x