Last Updated : 02 Oct, 2020 04:19 PM

 

Published : 02 Oct 2020 04:19 PM
Last Updated : 02 Oct 2020 04:19 PM

ராகுல் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் உண்ணாவிரதம்: மோடி தலைமையில் சர்வாதிகார ஆட்சி- நாராயணசாமி விமர்சனம்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி விமர்சித்துள்ளார். தலித் பெண் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதுடன் உத்தரப் பிரதேச முதல்வர் பதவி விலகவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இறந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் சென்றபோது அவர்களை உத்தரப் பிரதேசப் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.அப்போது ராகுல் கீழே விழுந்ததுடன், அவர்களைக் கைது செய்து டெல்லிக்குப் போலீஸார் அனுப்பிய சம்பவத்தால் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் அண்ணா சிலை அருகே காங்கிரஸார் உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கினர். முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்துப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். கரோனா பரவல் காரணமாகச் சுழற்சி முறையில் 100 பேர் எனக் காங்கிரஸார் போராட்டத்தில் பங்கேற்றனர்.

முதல்வர் நாராயணசாமி போராட்டத்தைத் தொடங்கிவைத்துவிட்டு காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார். உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பாரதிய ஜனதா அரசையும், உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா அரசையும் கண்டித்துப் பேசினர்.

போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அவருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சமுதாய பெண்கள் பாலியல் பலாத்கார சம்பவம், படுகொலைகள் தொடர் கதையாகி வருகிறது.

தற்போதைய குற்றச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கடும் நடவடிக்கையும் அவசியம் தேவை. இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x