Published : 02 Oct 2020 02:52 PM
Last Updated : 02 Oct 2020 02:52 PM
இணையத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமான பெயர் நீச்சல்காரன். ராஜாராமன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பன்னாட்டு நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகிறார். நீச்சல்காரன் என்ற பெயரில் வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவரும் இவர், தமிழ் சந்திப்பிழை திருத்தியான 'நாவி', எழுத்துப்பிழை திருத்தியான 'வாணி' போன்ற மென்செயலிகளை உருவாக்கியவர்.
இணையத்தில் தமிழ் மொழியைப் பரவலாக்குவதற்காக, விக்கிபீடியாவுடன் இணைந்து பல ஆயிரம் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், மலையாளம் மற்றும் இந்தி மொழிக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான 'பேச்சி' என்ற புதிய எந்திரவழி மொழிபெயர்ப்புச் செயலியை (பேச்சி செயலி) உருவாக்கியிருக்கிறார். உலக மொழிபெயர்ப்பு தினத்தையொட்டி இவரது புதிய செயலியைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர் சி.சிவக்குமார், வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
இந்த முயற்சி குறித்து நீச்சல்காரனிடம் கேட்டபோது, "இது ஒரு முன்னோட்டப் பதிப்புதான். மலையாள கட்டுரைகளைக் காப்பி செய்து இந்த இணையத்தில் போட்டால், அதனைத் தமிழில் ஓரளவுக்கு மொழி பெயர்த்துக் காட்டும். அடுத்தடுத்து இதனை மேம்படுத்தி, மிகச்சிறந்த மொழிபெயர்ப்புக் கருவியாக மாற்றுவோம். இப்போதைக்கு மலையாளம் புரியும், ஆனால் வாசிக்கத் தெரியாது என்பவர்களுக்கு இது ரொம்பவே உதவியாக இருக்கும். ஏனென்றால் மலையாள எழுத்துகளை எல்லாம் தமிழில் மாற்றிக் கொடுத்துவிடும்.
கூடவே, இந்தியில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் வசதியையும் செய்திருக்கிறோம். ஒரே நாடு, ஒரே மொழி என்று சொல்லப்படுகிற காலகட்டத்தில், மத்திய அரசு தொடர்பான பல ஆவணங்கள் தமிழில் கிடைப்பதில்லை. உதாரணமாக, தேசிய கல்விக்கொள்கையை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிட்டார்கள். அதனை தமிழில் மொழிபெயர்த்துப் படிக்க இதுபோன்ற செயலிகள் பயன்படும்" என்றார்.
"ஏற்கெனவே, 'கூகுள் ட்ரான்ஸ்லேட்டர்' இருக்கிறபோது, சிரமப்பட்டு மலையாளம், இந்திக்கென தனி செயலிகளை உருவாக்க வேண்டிய தேவை என்ன?" என்று அவரிடம் கேட்டபோது, "இன்றைய நிலவரப்படி, என்னுடைய மொழிபெயர்ப்புக் கருவியைவிட கூகுள் சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், கூகுள் தனிப்பட்ட ஒரு நிறுவனம். பல சேவைகளை முன்னறிவிப்பின்றி நீக்கிய அவர்கள் வரலாறு உண்டு. உதாரணமாக, கூகுள் ஐ.எம்.இ. என்ற தமிழ் டைப்பிங் டூலை நீக்கினார்கள்.
அதேபோல, மொழிபெயர்க்க வேண்டிய கட்டுரைக்கென்று கூகுளில் வார்த்தைக் கட்டுப்பாடு இருக்கிறது. அதில் உள்ள குறைகளைச் சரிசெய்யவோ, அந்தச் செயலியை மேம்படுத்தவோ நம்முடைய ஆய்வாளர்கள், மாணவர்களால் முடியாது. இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே அது கிடையாது. எனவேதான் சுயசார்புள்ள ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அடுத்து கூகுள் எந்திர வழிக் கற்றல் (மெஷின் லேர்னிங்) முறையைப் பின்பற்றுவதால், நிறையப் பிழைகள் வருகின்றன. ஐரோப்பிய மொழி அமைப்பிற்கேற்ப அவர்களது மொழிபெயர்ப்புக் கருவி வடிவமைக்கப்பட்டிருப்பதால், தென்னிந்திய மொழிகளுக்கு அது சரியாக வருவதில்லை. நாங்கள், தமிழ், மலையாள இலக்கண விதிகளின் அடிப்படையில் இந்தக் கருவியை உருவாக்கியிருக்கிறோம். எனவே, எந்த மலையாளக் கட்டுரையை இட்டாலும் அதைத் தமிழில் எழுத்துப் பெயர்த்துக் காட்டுகிறது. கூடுதலாக சுமார் இரண்டாயிரம் அடிச்சொற்கள் கொண்ட மலையாளத் தமிழ் இணைச் சொல் அகராதி இணைக்கப்பட்டுள்ளதால் இத்தகைய சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் காட்டுகிறது.
பொதுவாக தமிழைப் போல மலையாள வினைச்சொற்களில் பால் விகுதிகள் இல்லை. அதாவது 'சொன்னான்', 'சொன்னாள்', 'சொன்னார்' என்று சொல்லாமல் 'பறஞ்ஞு' என்ற ஒற்றைச் சொல்லே பயன்படுகிறது. இந்தியைப் போல மலையாளத்திலும் 42 மெய்யெழுத்துக்கள் உள்ளன. உ, ஒ, க, ஜ, ய, ழ, வ போன்ற எழுத்துக்களையும் சில துணையெழுத்துக்களையும் தமிழைப் போலவே இன்றும் எழுதி வருகிறார்கள். தமிழில் உள்ள பல சொற்களின் மருவிய வடிவை இன்றும் மலையாளத்தில் பயன்படுத்துகிறார்கள்.
தமிழில் உள்ளது போல மகரயீற்றுச் சொற்களுக்கு அத்து சாரியை, பன்மைக்கு 'கள்' விகுதி, நான்காம் வேற்றுமையாக 'கு', 'ய்' மற்றும் 'வ்' உடன்படுமெய் என இன்னும் பல ஒற்றுமைகள் உள்ளன. அதனால் மலையாளத்தை எழுத்துப் பெயர்த்து, அதாவது, மலையாளத்தைத் தமிழ் எழுத்தில் எழுதினாலே பல சொற்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. கூடுதலாக சில விகுதிகளுக்கு இணை விகுதிகள் கொடுத்தால் மொழிபெயர்ப்பு சிறப்பாக வரும். இதன் சொல் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, முழுமையான மொழிபெயர்ப்பு சேவையையும் எதிர்காலத்தில் வழங்கும்.
இதன் முக்கிய இலக்கு தமிழிலிருந்து பிற மொழிக்கும் மொழிபெயர்ப்பைச் செய்வதாகும். பல மொழி பேசும் விக்கிப்பீடியர்களும் இந்த முயற்சிக்கு உதவுகிறார்கள். ஆர்வமுள்ள மொழி ஆர்வலர்களும் இந்த முயற்சிக்கு உதவலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT