Published : 02 Oct 2020 02:24 PM
Last Updated : 02 Oct 2020 02:24 PM
கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாகக் கூடி ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பிரச்சனைகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில், விவாதித்து முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம், இந்த மரபை மீறும் வகையில், ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியது ஜனநாயக முறைகளை மதிக்காதப் போக்கு என பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிராம சபைக்கூட்டங்களில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து என அரசு அறிவித்தது. இதை கண்டித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் நடைபெற்ற ‘மக்கள் சபையில்’ பங்கேற்றார். இது கிராம சபை அல்ல மக்கள் சபை என பேசிய ஸ்டாலின் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார்.
கிராம சபை கிராம மக்களால் ஊராட்சி மன்ற செயல்பாடுகள், மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் கூட்டம் இதில் மரபை மீறும் வகையில் ஸ்டாலின் கலந்துக்கொள்வது கண்டிக்கத்தக்கது என பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாகக் கூடி ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பிரச்சனைகள் குறித்து, விவாதித்து முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம். இக்கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்றால் கூட்டத்தின் நோக்கமே சிதைந்து போகும்.
இந்த மரபை மீறும் வகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியது ஜனநாயக முறைகளை மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேலும், இவ்வாண்டு கரோனா தொற்று நோய் காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஸ்டாலின் விரும்பினால், தனது கட்சிக்காரர்களுடன் தனியே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டுமே தவிர, கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றுயிருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...