Published : 02 Oct 2020 01:27 PM
Last Updated : 02 Oct 2020 01:27 PM
மாணவர்களுக்கு இந்தியில் இணைய வழி “புதிர் போட்டி” நடத்தப்படுவதை கண்டித்துள்ள ஸ்டாலின், இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம்” என்று அறிவித்துவிட்டு முதல்வர் ஏன் இந்தியை இவ்வளவு வேகமாகத் தமிழ்நாட்டில் திணித்துக் கொண்டிருக்கிறார்? மொழிக் கொள்கையிலும் முதல்வர் பழனிசாமி போடும் இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினின் முகநூல் பதிவு வருமாறு:
“அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு - தமிழகத்தில் உள்ள 3 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தியில் இணைய வழி “புதிர் போட்டி” நடத்துவது கண்டனத்திற்குரியது.
“மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு", “அவருடைய மக்கள் பணிகள்", “வாழ்க்கையோடு இணைந்த அவருடைய கருத்துருக்கள்” ஆகிய தலைப்பில் நடைபெறும் போட்டிக்கு – தமிழக மாணவர்களுக்கு இந்தியில் கேள்விகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்மொழியில் கேள்வித்தாள் இல்லை.
ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் இந்தி வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தைத் தமிழக சட்டமன்றத்தில் அடாவடியாக வைத்தார். “இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம்” என்று அறிவித்துவிட்டு - முதல்வர் ஏன் இந்தியை இவ்வளவு வேகமாகத் தமிழ்நாட்டில் திணித்துக் கொண்டிருக்கிறார்? அணையப் போகின்ற தீபம் ஆட்டம் போடுவது போல், மொழிக் கொள்கையிலும் முதல்வர் பழனிசாமி போடும் இரட்டை வேடம் - மீண்டுமொரு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழகம் சந்திக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விடும், எச்சரிக்கை.
புதிய தேசிய கல்விக் கொள்கை முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குத் தாய்மொழிக் கல்வியை உறுதி செய்கிறது” என்று பிரதமரும், மத்திய கல்வித்துறை அமைச்சரும் அளித்த உறுதி என்னவாயிற்று? அந்த வாக்குறுதிகள் எல்லாம் தமிழகத்தை ஏமாற்றவா? தமிழகம் போன்று இந்தி பேசாத பிற மாநிலங்களை ஏமாற்றவா?
மத்திய பாஜக அரசின் ஆதரவாக இருந்து,பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்து “இந்தியில் கேள்வி கொடுப்பதும்” “இந்தியில் பெயர் சூட்டுவதும்” கடும் கண்டனத்திற்குரியது.
இருமொழிக் கொள்கையிலிருந்து பின்வாங்கி - பதவி சுகத்தை அனுபவிக்கும் எஞ்சிய நாட்களில், இந்தியைத் தமிழகத்தில் புகுத்தி - மும்மொழித் திட்டத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதை முதல்வர் பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT