Published : 02 Oct 2020 12:42 PM
Last Updated : 02 Oct 2020 12:42 PM

டிஎன்எஸ்சி வங்கிச் சேவைகள் நாள் முழுவதும் முடக்கம்: சர்வர் பிரச்சினையால் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்ய தொடர் முயற்சி

சென்னை

சென்னையில் செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி கிளைகளின் செயல்பாடுகள் அனைத்தும் நேற்று முழுவதும் முடங்கிப் போனது. சர்வர் பிரச்சினையால் ஏற்பட்ட இந்த தடங்கலைச் சரிசெய்ய தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் அவற்றின் கீழே 180 நகரக் கூட்டுறவு வங்கிகளும் அவற்றின் கீழே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கக் கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கான தலைமை மற்றும் வழிகாட்டல் வங்கியாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி (டிஎன்எஸ்சி) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குச் சென்னைப் பகுதியில் மட்டும் 46 கிளைகள் உள்ளன.

சென்னையில் உள்ள இந்த வங்கிக் கிளைகள் மூலம் ஆண்டுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவு செய்யப்படுகிறது. கடந்த மாத இறுதி வரை, இந்தக் கிளைகள் அனைத்தும் தனிப்பட்ட சர்வரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்ததால் பரிவர்த்தனைகள் உடனுக்குடன் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி முதல் வேறொரு சர்வருக்கு வங்கிக் கிளைகள் அனைத்தும் மாற்றப்பட்டன. இதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நேற்று முழுவதும் இந்த கிளைகளில் வங்கிச் சேவைகள் அனைத்தும் முடங்கிஅ.

மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைமை வங்கிச் சேவைகளும் முடங்கிப் போனது. சென்னையில் செயல்படும் இந்த வங்கியின் ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. நேற்று இரவு வரை கோளாறைச் சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை நிலைமை சீராகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அந்த வங்கிகள் தரப்பிலிருந்து பேசியவர்கள், “ஏற்கெனவே இருந்த சர்வர் நல்ல முறையில்தான் செயல்பாட்டில் இருந்தது. எதற்காகத் தனிப்பட்ட சர்வரின் இயக்கத்திலிருந்து குழு சர்வருக்கு (க்ரூப் சர்வர்) வங்கிச் சேவைகளை மாற்றினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இப்படி மாற்றப்பட்ட மறுநாளே வங்கிச் சேவைகள் முடங்கிவிட்டன. சர்வர் பிரச்சினை என்று சொல்லி நேற்று ஒரு நாள் முழுவதும் வாடிக்கையாளர்களைச் சமாளித்து விட்டோம். இன்று விடுமுறை தினம் என்பதால் பெரிதாகப் பிரச்சினை தெரியவில்லை. இன்றைக்குள் பிரச்சினை சரிசெய்யப்படவில்லை என்றால் நாளையும் வங்கிப் பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படலாம்.

மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன்கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதியளிக்கும் இடத்தில் டிஎன்எஸ்சி வங்கி உள்ளது. பயிர்க்காப்பீடு உள்ளிட்ட விவசாயிகளுக்கான பணப் பரிவர்த்தனைகளை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள்தான் செயல்படுத்தி வருகின்றன. இதற்கான அவசர நிதித் தேவைகளை டிஎன்எஸ்சி வங்கியிடம் இருந்துதான் இந்த வங்கிகள் பெற்று வருகின்றன.

சர்வர் பிரச்சினையால் டிஎன்எஸ்சி வங்கி முடங்கினால் அதன் தாக்கம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் சேவைகளையும் பாதிக்கும். எனவே, பிரச்சினையை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x