Published : 02 Oct 2020 10:53 AM
Last Updated : 02 Oct 2020 10:53 AM
திருமண மண்டபங்களுக்குச் சமையல் வேலைக்குச் சென்று கொண்டிருந்த திருநங்கைகள், கரோனா கால ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பின்றி தவித்த நிலையில், தற்போது கோவையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உதவியுடன் ஓர் உணவகத்தையே தொடங்கி நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலையில் ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தை திருநங்கைகளே நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உணவகப் பொறுப்பாளர் திருநங்கை சங்கீதா கூறியதாவது: எங்கள் வாழ்வாதாரத்துக்காக பல்வேறு இடங்களில் சமையல் வேலைக்குச் சென்றோம். கரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போனது. இதனால் மிகுந்த சிரமத்தை சந்தித்தோம். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி, ஆர்எஸ் புரம் பகுதியில் ஓர் உணவகத்தை அமைத்துக் கொடுத்தனர். 10 பேர் வேலை செய்து வருகிறோம். காலை 5.30 முதல் 12 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் உணவகம் செயல்படும். ஆர்டரின் பேரில் அவர்கள் விரும்பும் உணவு வகைகளும் சமைத்துக் கொடுக்கிறோம்.
சாப்பாடு, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சப்பாத்தி, புரோட்டா, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, முட்டை கிரேவி, குருமா என விதம்விதமாக உணவுகளை சுகாதாரமான முறையில் சுவையாக தயாரித்து வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள் தேடி வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர்.
உணவகம் தொடங்க உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சங்கீதா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT