Published : 02 Oct 2020 07:07 AM
Last Updated : 02 Oct 2020 07:07 AM
தமிழக நகர்ப்புற மற்றும் ஊரகஉள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வரும் கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள்தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது 11,193 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டிலேயே சென்னையில்தான் அதிகளவில் கரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான காய்கறி, பழங்கள் மற்றும் இதர பொருட்களை விற்போரிடம் இருந்துதொற்று பரவாமல் தடுக்க இதுவரை 1 லட்சத்து 124 விற்பனையாளர்களுக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் கரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சென்னை குடிநீருக்கான புதிய திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சித் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT