Published : 01 Oct 2020 08:10 PM
Last Updated : 01 Oct 2020 08:10 PM

இனி குடும்பத்தினர் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்; கைரேகை கட்டாயம்?- ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்

ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தைத் தமிழக அரசு இன்று (அக்.1) முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த ஒரு நியாயவிலைக் கடையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். இதன்மூலம் பொது விநியோக முறையில் பெரும் மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ரேஷன் பொருட்களை வாங்கக் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வருவதும் அவர்களின் கைரேகைப் பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரே நபர், நிறைய ரேஷன் அட்டைகளைக் கொண்டுவந்து பொருட்களை வாங்கிச் செல்வதாகவும் உயர் அதிகாரிகள் தங்களின் ஊழியர்களைக் கொண்டு அரசு வழங்கும் மானிய விலையிலான பொருட்களை வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. வியாபாரிகள், பயனாளிகள் என்ற போர்வையில் பதுக்கலில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.

முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், அரசு ரேஷன் பொருட்களை வாங்க, அட்டையில் உள்ள குடும்பத் தலைவர் வர முடியாத சூழலில், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை மூலம் பொருட்களை வாங்கும் பட்சத்தில் ஸ்மார்ட் அட்டை கூடத் தேவையில்லை. எனினும் தொழில்நுட்பப் பிரச்சினை அல்லது மங்கலான ரேகை உள்ளிட்ட காரணங்களால் கைரேகை பதிவு செய்யப்பட முடியாத சூழலில், அட்டைதாரரின் ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி (ஒருமுறை கடவுச் சொல்) அனுப்பப்படும். அந்த எண்ணைச் சரியாகச் சொல்லி, பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கும் வாய்ப்பு இல்லாதபோது ஸ்மார்ட் குடும்ப அட்டையில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். இதைக் கொண்டும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும். இதற்கான பயிற்சிகள் ரேஷன் கடை அலுவலர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டன.

எனினும் வேற்று நபர்கள், குறிப்பிட்ட அட்டைதாரரின் தொலைபேசியைக் கொண்டுசென்று, ரேஷன் பொருட்களைப் பெற முடியாது. இதனால் ஒற்றை நபராக உள்ள வயதானவர்களும் உடல்நலக் குறைவு காரணமாக நேரில் வர இயலாத அட்டைதாரர்களும் என்ன செய்வார்கள் என்று சந்தேகம் எழுந்தது.

இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை வாங்க முடியாத பயனாளிகள், 'எனக்குப் பதிலாக இவர் வந்து பொருட்களை வாங்கி வருவார்' என்று அங்கீகரிப்புக் கடிதத்தை வழங்க வேண்டும்.

இதற்கான அங்கீகரிப்புப் படிவத்தை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதைச் சரியான தகவல்களுடன் பூர்த்தி செய்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். சென்னை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் மண்டல அலுவலகங்களில் உள்ள உதவி ஆணையாளரிடம் கையெழுத்து வாங்க வேண்டியது அவசியம். அந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட நபர் தவிர்க்க முடியாத காரணங்களால் வருங்காலத்தில் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டால், மீண்டும் அங்கீகரிப்புப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, வேறொரு நபரை அங்கீகரிப்பதாக ஒப்புதல் வழக்கி, மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எனினும் அதுவரை ரேஷன் பொருட்களை வாங்க முடியாது.

இதற்கான மென்பொருள் தயாரிப்புப் பணியில் உள்ளது. ஓரிரு வாரங்களில் அங்கீகரிப்புப் படிவம் அமலுக்கு வரும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x