Published : 01 Oct 2020 06:29 PM
Last Updated : 01 Oct 2020 06:29 PM

உதகை நகரில் பராமரிக்கப்படாமல் சாலைகளில் வலம் வரும் குதிரைகள்: உரிமையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

நகரில் சுற்றித்திரியும் குதிரைகள்.

உதகை

நீலகிரி மாவட்டம் உதகை நகருக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம மக்கள், வெளிமாவட்டத்திலிருந்து வியாபார விஷயமாக தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் விருப்பப் பொழுதுபோக்கு குதிரை சவாரி. இதற்காக உதகை நகர் காந்தல் பகுதியில் பலர் சவாரிக்காக குதிரைகளை வளர்க்கின்றனர். இந்நிலையில், சவாரிக்காக வளர்க்கப்படும் குதிரைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரிக்காத உரிமையாளர்கள், அவற்றை மேய்ச்சலுக்காகத் திறந்து விடுகின்றனர். இதனால், இந்தக் குதிரைகள் நகர் முழுவதும் சுற்றி வருகின்றன.

சமீபகாலமாக நகரில் சுற்றும் குதிரைகள் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உதகை நகரில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், சுற்றித் திரியும் குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

காணாமல் போன பதிவுத் திட்டம்

இதையடுத்து, குதிரைகளைப் பதிவு செய்ய அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.

உதகையில் பொது இடங்களில் குதிரைகளின் நடமாட்டத்தைத் தடுக்க, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் குதிரைகளின் உரிமையாளர்களை அழைத்து, கணக்கெடுப்பு நடத்தி, நகராட்சி சார்பில் 'டோக்கன்' வழங்கப்பட்டது. விதி மீறி நகரில் சுற்றும் குதிரைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு,10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

ஆனால், அந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறி நகராட்சி நிர்வாகம் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இதனால், தற்போது உதகை நகரின் வீதிகளில் குதிரைகள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றன.

சவாரிக்குத் தடை

இந்நிலையில், உதகையில் ஓய்வுபெற்ற பந்தயக் குதிரைகளை சவாரிக்குப் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தடை விதித்துள்ளார்.

அவர் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை, நீலகிரி மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று ஓய்வுபெற்ற பந்தயக் குதிரைகளைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற பந்தயக் குதிரைகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல்கள் ஓய்வுபெற்ற பந்தயக் குதிரைகளுக்குச் செய்யப்படும் வதைச் செயலாகும். ஓய்வுபெற்ற பந்தயக் குதிரைகளை அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து துஷ்பிரயோகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு சவாரி செய்யும் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். மேலும், இக்குதிரைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர், இருப்பிட வசதி ஏதும் தரப்படாமல் அவற்றைத் தெருக்களில் தன்னிச்சையாக விட்டு விடுகின்றனர்.

இக்குதிரைகளின் உரிமையாளர்கள் அவர்களது பொறுப்பை உணராமல் அவற்றுக்கு மிகுந்த துன்பத்தை விளைவிக்கின்றனர். இக்குதிரைகள் தெருக்களில் சுற்றித் திரிவதால் அவற்றுக்குப் போதிய அளவில் மருத்துவ வசதியும் அளிக்கப்பட முடிவதில்லை. அதனால், அவற்றுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. அத்துடன் சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துகளிலும் சிக்கி இவை பாதிக்கப்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளின் காரணமாக இனிமேலும் கைவிடப்பட்ட குதிரைகள் சாலைகளில் சுற்றித் திரியுமானால் சம்பந்தப்பட்ட குதிரைகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அக்குதிரைகளின் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்" என்றார்.

ஆட்சியர் ஒரு புறம் இத்தகைய எச்சரிக்கையை விடுத்தாலும், தற்போது கரோனா காலத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகைக்குக் கட்டுப்பாடு உள்ள நிலையில், குதிரை சவாரி என்பது இல்லாததால், குதிரைகளின் உரிமையாளர்கள் அவற்றைப் பராமரிக்க முடியாமல் கைவிட்டு விட்டனர்.

இதனால், அவை உணவுக்காக குப்பைத்தொட்டிகளையும், தெருக்களையும் சுற்றி வருகின்றன.

சாலைகளில் வலம் வரும் குதிரைகளை நகராட்சி ஊழியர்கள்தான் பிடித்து தனியார் விலங்குகள் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் அவற்றைப் பிடிக்க நகராட்சி ஊழியர்கள் திண்டாடுகின்றனர்.

நகராட்சி ஊழியர்கள் கூறும்போது, ''ஆடு மற்றும் மாடுகளைப் பிடித்தால், அதன் உரிமையாளர்கள் தேடி வந்து அபராதம் செலுத்திவிட்டு அவற்றை மீட்டுச் செல்கின்றனர். குதிரைகளைப் பிடித்தால், அவற்றை யாரும் உரிமை கோருவதில்லை. நகராட்சி வசம் குதிரைகளைப் பராமரிக்க இடமும் இல்லை, நிதியும் இல்லை. இதனால், குதிரைகளைப் பிடித்தால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. மேலும், பிடிக்கச் செல்பவர்களைக் குதிரைகள் கடிக்க முற்படுவதும், உதைக்கவும் செய்கின்றன. இதனால் பிடிப்பவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை" எனத் தங்களின் இயலாமையைத் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x