Last Updated : 01 Oct, 2020 04:43 PM

 

Published : 01 Oct 2020 04:43 PM
Last Updated : 01 Oct 2020 04:43 PM

கோவை ரேஷன் கடைகளில் தரமற்ற முகக்கவசம் விநியோகிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட லேசான துணியாலான முகக்கவசம்.

கோவை

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற முகக்கவசம் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களுக்கும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தலா 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் முகக்கவசங்கள் தரமில்லாதவையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை சித்தாபுதூரில் உள்ள ரேஷன் கடையில் முகக்கவசத்தைப் பெற்ற பொதுமக்கள் கூறும்போது, "தரமான முகக்கவசம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், இந்த முகக்கவசங்கள் ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் இலவச வேட்டியில் செய்யப்பட்டது போல் மிகவும் லேசாக உள்ளன. இந்த முகக்கவசத்தை அணிந்துகொண்டால் நிச்சயம் மூச்சுக்காற்று எளிதாக வெளியேறும். இதனால், முகக்கவகசம் அணிவதற்கான நோக்கமே சிதைந்துவிடும். எனவே, முகக்கவசத்தின் தரத்தை ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்றனர்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்டதற்கு, "எங்களுக்கு அளிக்கப்படும் முகக்கவசத்தை நாங்கள் விநியோகம் மட்டுமே செய்கிறோம். கைத்தறி துறையினர்தான் முகக்கவசத்துக்குப் பயன்படுத்தப்படும் துணி, நூல் ஆகியவை தரமாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து அனுப்புகின்றனர்" என்றார்.

கைத்தறித்துறை உதவி இயக்குநர் கூறும்போது, "முகக்கவசத்தின் தரத்தை அறிய சிட்ராவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி, அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையிலேயே விநியோகிக்க ஏற்றது என பேரிடர் மேலாண்மைத்துறையினரிடம் அளிக்கிறோம். அவர்கள் பிரித்து ரேஷன் கடைகளுக்கு அனுப்புகின்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x