Published : 01 Oct 2020 03:04 PM
Last Updated : 01 Oct 2020 03:04 PM
சமீபகாலமாக வனப்பகுதிகளில் மது பாட்டில்கள் எறியப்படுவது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக வன உயிர் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது சுற்றுச்சூழலைக் கெடுப்பதுடன் வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்களை உள்ளடக்கியது கோவை வனக்கோட்டம். 711.80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இப்பகுதியில் மான், கரடி, சிறுத்தை, புலி, செந்நாய், கழுதைப் புலி, யானை, குரங்கு என ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன.
காடுகள், விவசாய நிலங்கள் சுருங்கி, குடியிருப்புகள் பெருகுவதால் இங்கே விலங்குகள் - மனித மோதலும் தொடர்கிறது. மின்வேலிகளில் சிக்கி யானைகள் மரணிப்பதும், பழங்கள், கிழங்குகளில் வெடிமருந்துகள் வைத்துக் காட்டுப் பன்றிகள் கொல்லப்படுவதும், விஷம் வைத்து மயில் உள்ளிட்ட பறவைகள் கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை அருகில் உள்ள வெள்ளியங்காடு வனப்பகுதிகளில், கடந்த ஞாயிறு அன்று பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்ட குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு வனத்துறையினரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
அத்திக்கடவு, குண்டூர், அன்சூர் சோதனைச்சாவடி பகுதிகளில் நடந்த இந்தப் பணியில் 40 கோணிப் பைகளில் 1 டன்னுக்கும் அதிகமான மட்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டன. அதில் 30 கோணிப் பைகளுக்குக் குறையாமல் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இவை எல்லாமே வனப்பகுதிகளிலும், வனத்தின் பவுண்டரி பகுதிகளிலும், நீரோடைகளிலும், பவானி ஆறு பாயும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டவை என இப்பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காரமடையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சரவணன் பேசும்போது, ''வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட மட்காத குப்பைகளைப் போடக் கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும், நம் மக்கள் கேட்பதில்லை. கரோனா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் காலகட்டத்திலேயே இத்தனை மது பாட்டில்கள் கிடைத்திருக்கின்றன என்றால், நிலைமை எவ்வளவு மோசம் என்பதை ஊகிக்க முடிகிறது.
பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பும் இதுபோன்ற தூய்மைப் பணிகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள், பாலித்தீன் பைகள் போன்றவைதான் அதிகம் கிடைக்கும். இந்த முறை மது பாட்டில்கள் மூன்று மடங்கு அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. இவை வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதால் இதைக் கட்டுப்படுத்துவது அவசியம்'' என்று குறிப்பிட்டார்.
இந்தப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர் தென்னரசு பேசுகையில், ''நாங்கள் ‘சமூக அக்கறை’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு நடத்தி வருகிறோம். வனப்பகுதியை ஒட்டி சூழல் கேடு ஏற்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட இருந்த சிமெண்ட் தொழிற்சாலை, நறுமணப் பொருள் தொழிற்சாலை, மதுபானக் கடை போன்றவற்றை மக்களைத் திரட்டி தடுத்து நிறுத்தினோம். அதேபோல் அவ்வப்போது மட்காத குப்பை சேகரிப்பு வேலைகளை வருடந்தோறும் செய்வோம்.
கரோனா பொதுமுடக்கத்தினால் சில மாதங்கள் இந்தப் பணி தள்ளிப் போய்விட்டது. இந்த முறை சேகரித்த குப்பைகளில் மது பாட்டில்களின் எண்ணிக்கை மிக அதிகம். மது பாட்டில்களைச் சுற்றுலாப் பயணிகள் எறிந்துவிட்டுப் போவதற்கு சாத்தியக் கூறுகள் குறைவு. ஏனென்றால் காட்டுக்குள் எந்த நேரம் என்ன மிருகம் வரும் என்று தெரியாத நிலையில் வாகனங்களில் ஆற, அமரக் குடித்துச் செல்வது முடியாத ஒன்று. காடும், சூழலும் பழகிப்போனவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும்.
காடுகளில் வசிக்கும் மலையோர மக்கள் ஊருக்குள் வந்து செல்கிறார்கள். அவர்களிடம் மதுப் பழக்கம் அதிகரித்திருக்கிறது. பிரதான சாலைகள், கிராமப்பகுதி சாலைகளில் சிறிய, பெரிய பாலங்கள் உள்ள கைப்பிடிச்சுவர் மேடைகளுக்கு அருகாமையில்தான் பெரும்பாலான பாட்டில்கள் கிடைத்திருக்கின்றன. அப்படியென்றால் அவ்வழியே போகிறவர்கள் அங்கே அமர்ந்து குடித்துவிட்டு பாட்டிலை நீர் நிலைக்குள், புதர்களுக்குள் வீசிச் செல்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. இதைத் தடுக்க வனத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT