Published : 01 Oct 2020 01:25 PM
Last Updated : 01 Oct 2020 01:25 PM

அறுபடும் அன்புச் சங்கிலி; பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசி உறவாட வேண்டும்: ராமதாஸ் அறிவுரை

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

குடும்பம் என்ற கூட்டுக்குள் அன்பை நிறைப்பதன் மூலம் சாத்தான்கள் ஊடுருவுவதை தடுக்க முடியும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 1) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இளம் பெண்கள் பெற்றோருக்குத் தெரியாமல் வீடுகளை விட்டு வெளியேறியதாக 53 ஆயிரத்து 898 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதிர்ச்சியும், கவலையும் அளிக்கும் இத்தகைய செயல்களுக்குப் பெற்றோர்களின் அக்கறையற்ற, அன்பு செலுத்தாத போக்குதான் காரணம் என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்து உண்மையாகும்.

பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி ஒருவர் திருமணமாகி குழந்தைகள் உள்ள ஒருவருடன் வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அந்த மாணவியின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர். இது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இதைத்தான் பல ஆண்டுகளாக அறிவுரையாக நானும் கூறி வருகிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பதின்வயது பெண்கள் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. காதல் திருமணங்கள் புரட்சியின் அடையாளங்கள் என்று போற்றப்படும் நமது மாநிலத்தில், இயல்பாக உருவாகாத காதலின் விளைவாக நடந்த பெரும்பான்மையான திருமணங்கள் தோல்வியில் முடிவடைகின்றன; உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவால், வேறு எந்தப் பாவமும் செய்யாத அப்பெண்கள் வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட வேண்டியுள்ளது என்ற உண்மை வெளிப்படுத்தப்படுவதில்லை. இளம்பெண்களின் துயரத்திற்கு அவர்களை மட்டுமே குறை கூறிப் பயன் இல்லை. அவர்களின் குடும்பத்தினரும்தான் காரணம் ஆவர்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஹார்மோன் கோளாறுகளால் அவர்களின் பதின்வயதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அது அவர்களை உளவியல் ரீதியாகப் பாதிக்கிறது. அந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு கடந்து வரும் பக்குவம் அவர்களுக்கு இருப்பதில்லை. அந்த நேரத்தில் அவர்களுக்குக் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் ஆதரவும், ஆலோசனையும், வழிகாட்டுதல்களும் தேவை. ஆனால், அவை பெரும்பான்மையான குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் நமது வாழ்க்கை முறையில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறைவான தேவை... நிறைவான வாழ்க்கை என்றிருந்த வாழ்க்கை முறை மாறிவிட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்குமான தேவைகளும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவிட்டன. அவற்றை அடைவதும், அதற்காக பொருள் ஈட்டுவதும் மட்டும்தான் வாழ்க்கையின் ஒற்றை லட்சியமாக மாறிவிட்டது.

அதனால், ஒவ்வொரு வீட்டிலும் கணவன், மனைவி ஆகிய இருவரும் பணிக்குச் செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆடம்பரமான வாழ்க்கை என்ற தேவையற்ற ஒன்றுக்காக, தேவையான பல விஷயங்களை இழக்கிறார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது ஆகும். பணி முடிந்து வீடு திரும்பும் பெற்றோர்கள் ஒருபுறம் சோர்வு, மறுபுறம் தங்களின் மன உளைச்சலைப் போக்குவதற்கான சிறிய பொழுதுபோக்குகளில் ஆழ்ந்து விடுவதால் அவர்களால் குழந்தைகளிடம் பேசவோ, அன்பு காட்டவோ வாய்ப்பின்றி போகிறது.

குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தங்களின் பெற்றோரிடம் தயக்கமின்றி கூறும் நிலைமை ஒவ்வொரு குடும்பத்திலும் நிலவ வேண்டும். அந்தச் சூழல் மட்டும் இருந்தால் வேறு எந்தப் பிரச்சினையும் இருக்காது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட்டுக்குடும்ப முறை வலிமையாக இருந்த வரையில் குழந்தைகளுக்குத் தேவையான அன்பும், அரவணைப்பும் பெற்றோரிடமிருந்து கிடைப்பதை விட கூடுதலாக தாத்தா, பாட்டியிடமிருந்தும், பிற உறவினர்களிடமிருந்தும் கிடைத்தன. குழந்தைகள் தங்களின் பிரச்சினைகளை குடும்ப உறவுகளிடம் கூறித் தீர்வு காண முடிந்தது.

கூட்டுக் குடும்ப முறை ஒழிந்ததால் குழந்தைகளைச் சுற்றி பின்னப்பட்டிருந்த அன்புச் சங்கிலியும், கட்டுப்பாட்டு வளையமும் அறுபட்டு விட்டன. அதனால் அன்புக்கு ஏங்கும் பெண் குழந்தைகளிடம் மற்றவர்கள் நாடகத்தனமான அன்பைக் காட்டி வலையில் வீழ்த்தி விடுகின்றனர். அதனால் அவர்களின் வாழ்க்கையே சிதைகிறது.

பள்ளி - கல்லூரி செல்லும் குழந்தைகளின் பெரும் ஆபத்தாக உருவெடுத்திருப்பவை செல்பேசிகள் ஆகும். அனைத்துத் தீமைகள் மற்றும் சீரழிவுகளுக்கு நுழைவாயிலாக அமைவது செல்பேசிகள்தான். அழிவின் ஆயுதமான செல்பேசிகள் தேவையில்லாமல் குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.

அதேபோல், பெற்றோரின் செல்பேசிகளை அவர்களுக்குத் தெரியாமல் குழந்தைகள் பயன்படுத்துகிறார்களா? என்பதையும் தொடர்ந்து கண்காணித்து தடுக்க வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளை எவரும் பின்தொடர்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க வேண்டியதும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் முக்கியக் கடமையாகும். இதன்மூலம் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கலாம்.

பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுப்பதற்கான சிறந்த வழி பெற்றோர்களின் அன்புச் சங்கிலிதான். அந்தச் சங்கிலி வலிமையாக இருந்தால் அதைத் தாண்டி எந்த ஆபத்தும் நுழைய முடியாது. எனவே, ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் பேசுங்கள்; அவர்களின் குறைகளை, பிரச்சினைகளை, யோசனைகளை, மகிழ்ச்சியான அனுபவங்களை, பள்ளியில் நடந்த நிகழ்வுகளைக் கேளுங்கள்.

அவர்களுக்குத் தேவையான அன்பையும், ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், குடும்பம் என்ற கூட்டுக்குள் அன்பை நிறைப்பதன் மூலம் சாத்தான்கள் ஊடுருவுவதைத் தடுக்க முடியும் என்பது எனது அன்பான அறிவுரையாகும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x