Published : 01 Oct 2020 11:24 AM
Last Updated : 01 Oct 2020 11:24 AM

பாதாள சாக்கடை திட்டப் பணியை ஆய்வு செய்ய வந்தபோது ஆம்பூர் எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வந்த எம்எல்ஏ வில்வநாதனை நேற்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஆம்பூர்

ஆம்பூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்த வந்த திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.165.55 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது.

ஆம்பூரில் 4 கழிவுநீர் சேகரிப்பு மண்டலங்கள், 4 கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலமாக 4 மண்டலங் களில் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு ஏ-கஸ்பா மயான சாலை பகுதியில் அமைக்கப்பட உள்ளது. பின்னர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திறக்கப்படும் நீர் கால்வாயின் வழியாக பாலாற்றில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகள், 36 மாதங் களில் முடிக்க திட்டமிடப்பட்டது. அதன் பிறகு 6 மாதம், சோதனை ஓட்டக் காலமாகும். சோதனை ஓட்டம் முடிந்தவுடன் ஒப்பந்ததாரரின் பராமரிப்புக் காலம் ஓராண்டாகும். இத்திட்டம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, வரும் 2021-ம் ஆண்டுஅக்டோபர் மாதம் பணிகள் முடிக் கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் அனைத்தும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் கழிவுநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 2-வது பிரிவில் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இப்பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ் வரன் கடந்த 26-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில், ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் நடை பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்ய நேற்று ஆம்பூர் எம்எல்ஏ (திமுக) வில்வநாதன், நகராட்சி ஆணையாளர் சவுந்திர ராஜன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சென்றனர். இதையறிந்த பொதுமக்கள், எம்எல்ஏ வில்வநாதன், நகராட்சி ஆணை யாளர் சவுந்திரராஜன் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அப்போது, “பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக நகராட்சியில் 36 வார்டுகளிலும் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

பணிகள் முடிந்த இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. தற்போது, மழைக் காலம் என்பதால் தோண்டப்பட்ட சாலைகள் மேலும் சேதமடைந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஆம்பூர் பெத்லகேம், ரெட்டி தோப்பு, பி-கஸ்பா மற்றும் ஏ-கஸ்பா பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து பல வாரங்கள் ஆகியும் சாலை கள் சீரமைக்கப்படவில்லை. இதனால், சீரான பயணத்தை மேற் கொள்ள முடியவில்லை. சில பகுதி களில் மழைநீருடன், கழிவுநீர் பள்ளத்தில் குட்டைப்போல் தேங்கியிருப்பதால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பணிகள் முடிந்த இடங்களில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என நகராட்சி அலுவலகம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, நகராட்சி ஆணை யாளர் சவுந்திரராஜன், “பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வீடுகளுக்கு இணைப்பு வழங்கும்போது ஏதேனும் பிரச்சினை வருகிறதா? என்பதை ஆய்வு செய்த பிறகே, சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். இதனையேற்று, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x