Published : 01 Oct 2020 11:11 AM
Last Updated : 01 Oct 2020 11:11 AM

தமிழக - ஆந்திர எல்லையில் கட்டப்பட்டுள்ள மோர்தானா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

கவுன்டன்யா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. படம்: வி.எம்.மணிநாதன்.

குடியாத்தம்

தமிழக-ஆந்திர எல்லையில் கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை 7-வது முறையாக முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளிக்க குவிந்து வருவதால் காவல் துறை யினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தமிழக-ஆந்திர எல்லையை யொட்டி கவுன்டன்யா நதியின் குறுக்கே மோர்தானா நீர்த்தேக்கத் தடுப்பணை கட்டப்பட்டது. 11.50 மீட்டர் (சுமார் 37 அடி) உயரமும் 261.360 மில்லியன் கன அடி தண்ணீரையும் தேக்கி வைக்க முடியும். நீர்த்தேக்க அணைக்கான நீர்பிடிப்புப் பகுதி அனைத்தும் ஆந்திர மாநில வனப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு மழை பெய் தால் அணை வேகமாக நிரம்பும்.

மோர்தானா அணை கடந்த 2000-ம் ஆண்டு முதல் பயன் பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை 6 முறை முழுமையாக நிரம்பியுள்ளது. கடைசியாக, கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி முழுமையாக நிரம்பியது. அதே போல், பாசனம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்ட கடந்த 2018-ம் ஆண்டு அணையின் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப் பட்டது.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது அதி கரித்து வந்தது. கடந்த ஒரு வாரமாக தொடர் நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து. முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அணைப் பகுதியில் மழை பெய்தது. இதனால் மோர்தானா அணை பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 24 மி.மீ மழை பதிவாகி இருந்தது. அணைக்கான நீர்வரத்து 17.303 கன அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்ததால் நேற்று காலை 7-வது முறையாக அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறத் தொடங்கியது.

இந்தத் தகவலால் நேற்று காலை முதல் அணைப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் திரண்டது. தொடரும் மழையால் வரும் நாட் களில் இன்னமும் கூட்டம் வரும் என்பதால் குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் அங்கு பாது காப்புப் பணியில் ஈடுபட்டு வருகின் றனர். மேலும், அணையின் கீழ் பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு களை பொதுப்பணித் துறையினர் செய்துள்ளனர்.

விரைவில், வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் மொத்தமும் அப்படியே வெளியேறும் வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது. எனவே, கவுன்டன்யா ஆற்றில் தண்ணீர் செல்லும் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயரும் என்பதுடன் கவுன்டன்யா ஆற்றை நம்பியுள்ள ஏரிகளுக்கும் நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x