Published : 01 Oct 2020 07:50 AM
Last Updated : 01 Oct 2020 07:50 AM
தமிழகத்தில் 9-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் தொடங்குகிறது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 கட்டமாக அடுத்தடுத்த தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின், முதல்வர் பழனிசாமி, ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
கூடுதல் நேரம்
அதே நேரம் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் இரவு 9 மணி வரையும், பார்சல் சேவைகள் 10 மணி வரையும் செயல்படும் வகையில் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளுக்கு 100 பேருக்கு மிகாமல் பணியாற்றவும், அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் செயல்படவும், ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் வாரச்சந்தைகள் செயல்படவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டது.
அதே நேரம், 144 தடையுத்தரவு, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு ஆகியவை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் 9-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்குகிறது. பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு குறித்து தற்போது மத்திய அரசு நிலையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில், விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT