Published : 30 Sep 2020 07:42 PM
Last Updated : 30 Sep 2020 07:42 PM
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
அடுத்தக்கட்டமாக மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடைபெறும் எனத் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகழாய்வு தொடக்கம்:
சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் கடந்த மே மாதம் 25-ம் தேதி தொடங்கியது. சிவகளையில் தொல்லியல் துறையின் அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையிலும், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு இயக்குநர் பாஸ்கரன் தலைமையிலும் கடந்த 4 மாதங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
சிவகளையில் 23 குழிகளும், ஆதிச்சநல்லூரில் 72 குழிகளும் தோண்டப்பட்டன. இவற்றில் சிவகளையில் 31 முதுமக்கள் தாழிகள், ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளைத் திறந்து அவற்றின் உள்ளே இருக்கும் பொருட்களை சேகரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது.
500 பொருட்கள்:
இதில்,பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்களான மண் பானைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட 21 வடிகால் குழாய்கள், தாயப்பொருட்கள், கூரை ஓடுகள், சுடுமண் பொம்மைகள். வட்ட சில்கள், புகைப்பான்கள், கண்ணாடி மணிகள், இரும்பு கத்தி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள், சதுரங்ககாய் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள், கீரல்கள், குறியீடுகள், கரித்துண்டுகள், மற்றும் எலும்புகள், தாடைகள், நெல்மணிகள், நாணயங்கள், கூஜாக்கள் என 500-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
இதில், எலும்புகள் மரபணு பகுப்பாய்வுக்காக மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதுபோல நாட்டில் உள்ள பல்வேறு ஆய்வு மையங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் வந்து இங்கு கிடைத்த பல்வேறு பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து சென்றுள்ளனர். மேலும் இங்கு கிடைத்த பல்வேறு பொருட்களை ஆய்வுகளுக்கு அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அகழாய்வு நிறைவு:
சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை செப்டம்பர் மாதம் வரை மட்டுமே அனுமதி அளித்திருந்தது. அதன்படி இரு இடங்களிலும் கடந்த 4 மாதங்களாக நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டு, கடந்த 4 மாதங்களாக நடைபெற்ற பணிகளை கணினி மூலம் ஆவணப்படுத்தும் பணிகளை தொல்லியல் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அகழாய்வுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் தார்பாய்கள் போட்டு மூடப்பட்டன.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நிறைவுப் பணிகள் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர், தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பணிகளை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டார். ஆய்வு மாணவியர் சோபனா, ரெக்க்ஷனா ஆகியோர் அகழாய்வு குறித்து அவருக்கு எடுத்து கூறினர். அவருடன் எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், முத்தாலங்குறிச்சி காமராசு, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல் சிவகளையில் அகழாய்வு இயக்குநர் பிரபாகரன், தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் தலைமையில் அகழாய்வு நிறைவு நடைபெற்றன.
அடுத்தக் கட்ட பணிகள்:
இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அளித்த அனுமதி நேற்றோடு நிறைவு பெற்றது. இதையடுத்து அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. 4 மாதங்கள் நடைபெற்ற பணிகளை ஆவணப்படுத்தும் பணி சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
அடுத்தக் கட்டமாக அடுத்த ஆண்டு சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி கோரி மத்திய தொல்லியல் துறைக்கு விண்ணப்பித்துள்ளோம்.
எனவே, இரு இடங்களிலும் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும். இம்முறை கரோனா ஊரடங்கு காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அடுத்தக் கட்டத்தில் அகழாய்வு பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றனர் அவர்கள்.
இது குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெறக் காரணமாக இருந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் கூறும்போது, "சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகளில் தமிழர்களின் பழமையை, தொன்மையை நிருப்பிக்கும் பல பொருட்கள் கிடைத்துள்ளன. இந்தப் பொருட்கள் குறித்த ஆய்வு முடிவுகள் வரும் போது பண்டைய தமிழர்கள் குறித்த பல விசயங்கள் உலகுக்கு தெரிய வரும்.
இங்கு அகழாய்வுப் பணிகள் தொடங்கிய மூன்று மாதங்களிலேயே தமிழக அரசு முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டது. எனவே, முழுமையான அகழாய்வு அறிக்கையை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
இரு இடங்களிலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அகழாய்வு நடைபெறும் என்ற தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களோடு கொற்கை மற்றும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மற்ற இடங்களிலும் அகழாய்வு நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன் மூலம் உலகமே வியக்கும் வகையில் தமிழர்களின் பண்டைய நாகரீகம், பண்பாடு குறித்த பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT