Last Updated : 30 Sep, 2020 05:15 PM

 

Published : 30 Sep 2020 05:15 PM
Last Updated : 30 Sep 2020 05:15 PM

புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் துணைக் கட்டுப்பாட்டு அறை விரைவில் திறப்பு

புதுக்கோட்டையில் தயாராகி வரும் 108 ஆம்புலன்ஸ் துணைக் கட்டுப்பாட்டு அறைக் கட்டிடம்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் துணைக் கட்டுப்பாட்டு அறை விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ஜிவிகே, இஎம்ஆர்ஐ நிறுவனம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் கட்டுப்பாட்டு அறை சென்னையில் உள்ளது.

இக்கட்டுப்பாட்டு அறை மூலம் பிற பகுதிகளில் இருந்து தொடர்பு கொள்வோரின் விவரங்களைக் கண்டறிந்து அருகில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் தேவை நாளுக்குள் நாள் அதிகரித்து வருவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொடர்புகொள்வோரின் வசதிக்காகவும், நொடிப் பொழுதுகூட வீணாகாமல் விரைந்து வாகனங்களை அனுப்பி வைப்பதற்காகவும் புதுக்கோட்டையில் மாநில அளவிலான துணைக் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கட்டிடத்தில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 19 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், "தமிழகத்தில் 1,005 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையாற்றி வருகின்றன. கூடுதலாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அவற்றில், 130 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாளர்களுக்கு ஏற்பட்ட கரோனா பாதிப்பினால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதேபோன்று, அவ்வப்போது தொழில்நுட்பக் குறைபாடும் ஏற்படுவதுண்டு. இதனால் மக்களுக்கு சேவையளிப்பதில் சில நேரங்களில் தாமதம் ஏற்பட்டுவிடுகிறது.

இதைத் தடுப்பதற்காக தமிழக அரசின் உத்தரவுப்படி புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் துணைக் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வளாகத்தில் ஏற்கெனவே புறநோயாளிகள் பிரிவாகச் செயல்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இங்கு முதல் கட்டமாக 19 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஓரிரு வாரங்களில் இக்கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வரவுள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x