Published : 30 Sep 2020 05:01 PM
Last Updated : 30 Sep 2020 05:01 PM
திருச்சி துவாக்குடியில் உள்ள பறந்தான்குளம் ஏரி அருகே செல்லும் சுற்றுச்சாலையில் இன்று உண்ணாவிரதம் இருந்த விவசாயி உட்பட இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கரூர் புறவழிச் சாலையில் உள்ள திண்டுக்கரை முதல் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரைவட்ட சுற்றுச்சாலையில் திருச்சி புறவழிச் சாலை 67-க்கு உட்பட்ட பஞ்சப்பூர்-துவாக்குடி வரையிலான பகுதி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் காரைக்குடி அலகிலும், பஞ்சப்பூர் முதல் திண்டுக்கரை வரையிலான பகுதி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கரூர் அலகிலும் வருகின்றன. இந்த அரைவட்ட சுற்றுச்சாலைத் திட்டத்துக்காக மண்ணைக் கொட்டி ஏரிகள் அழிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏரிக்குள் மண்ணைக் கொட்டி சாலைகள் அமைக்க நிரந்தரத் தடை விதித்ததுடன், வேறு வழியில்லை எனில் உயர்நிலைப் பாலமாகவோ அல்லது சாலையை ஏரிக்கு வெளியே செல்லும் வகையிலோ அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
ஆனால், அரைவட்ட சுற்றுச்சாலைப் பணிகளில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் அலுவலர்கள் செயல்படுவதாகக் கூறி அதைக் கண்டித்தும், பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் துவாக்குடி பறந்தான்குளம் ஏரி அருகே செல்லும் சுற்றுச்சாலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.ப.சின்னத்துரை, ஜனநாயக சமூகநலக் கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சம்சுதீன் ஆகியோர் இன்று (செப். 30) உண்ணாவிரதம் இருந்தனர்.
தகவலறிந்து திருவெறும்பூர் காவல் துறையினர் வந்து போராட்டத்தைக் கைவிடுமாறு கூறியும், போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, துவாக்குடி காவல் நிலையத்தில் திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞானாமிர்தம் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்த நடைபெற்றது.
இதில், கோரிக்கைகள் தொடர்பாக அக்.5-ம் தேதி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கரூர், காரைக்குடி அலகின் இயக்குநர்கள், திருச்சி நீர்வள ஆதார அமைப்பின் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், திருச்சி அரியாறு வடிநில கோட்டச் செயற்பொறியாளர் ஆகியோருடன் பேசி முடிவு செய்வது என்றும், அதுவரை பணிகளை நிறுத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT