Published : 30 Sep 2020 02:33 PM
Last Updated : 30 Sep 2020 02:33 PM
தமிழக காவல்துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக லஞ்ச ஒழிப்பு டிஜிபி விஜயகுமார் இன்றுடன் ஓய்வு பெறுவதை ஒட்டி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி முக்கியமானது. இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் பதவி. இதுதவிர கூடுதல் டிஜிபியாக (ஏடிஜிபி) சட்டம் ஒழுங்கு பதவி உள்ளது. இவருக்குக் கீழ் சென்னை காவல் ஆணையரகம் தவிர மற்ற மாநிலம் முழுவதும் உள்ள, மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் வருவார்கள்.
இதேபோன்று லஞ்ச ஒழிப்புத்துறை தனியாக இயங்கக்கூடிய முக்கியமான ஒரு பிரிவு. இதன் ஏடிஜிபி பதவி நிலை உயர்த்தப்பட்டு டிஜிபி அளவிலான அதிகாரியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி, ஏடிஜிபி அந்தஸ்துக்குக் குறைக்கப்பட்டு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்ட உத்தரவு:
1 . தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ( இந்தப் பதவி டிஜிபியிலிருந்து, ஏடிஜிபி பதவிக்குக் குறைக்கப்பட்டுள்ளது).
2. மதுவிலக்கு அமல் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மாற்றப்பட்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT