Published : 29 Sep 2020 05:12 PM
Last Updated : 29 Sep 2020 05:12 PM

தனியார் நிறுவனத்துக்கு விதியை மீறி கடன் வழங்கி ரூ.6.19 கோடி இழப்பு; சென்னை வங்கி அதிகாரிகள் 4 பேருக்கு சிறைத்தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை

தனியார் நிறுவனத்துக்கு விதியை மீறிக் கடன் வழங்கியதன் மூலம் வங்கிக்கு ரூ.6.19 கோடி நஷ்டம் ஏற்படுத்தக் காரணமாக இருந்த சென்னை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் 2006- 2007 ஆம் ஆண்டில், நேஷனல் மெடிசின் என்ற தனியார் நிறுவனத்திற்குக் கடன் வழங்கியதன் மூலம் வங்கிக்கு 6.19 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வங்கி அதிகாரி கண்ணன், மஞ்சுளா, நரேஷ்குமார், பார்வதி ராமகிருஷ்ணன், நேஷனல் மெடிசின் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயின் ஆகியோர் மீது சிபிஐ கடந்த 2009 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை 11-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் எம்.வி.தினகர் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் நிறைவுற்ற நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அண்ணாசாலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளர் கண்ணனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து சென்னை 11-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் உத்தரவிட்டார்.

மேலும், நேஷனல் மெடிசின் நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயினுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 4 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். அவரின் நிறுவனத்திற்கு 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மஞ்சுளா என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பார்வதி ராமகிருஷ்ணன் என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x