Published : 29 Sep 2020 02:04 PM
Last Updated : 29 Sep 2020 02:04 PM
அக்.1 ஆம் தேதி முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாக 8-ம் கட்ட ஊரடங்கு செப்.30-ம் தேதி முடிவடைவதையொட்டி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் அந்தக் கூட்டத்தில் பேசியதாவது:
“தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய்ப்பரவலைத் தடுத்துள்ளது. பொதுமக்களுக்குத் தொற்று அறிகுறி ஏற்பட்டவுடன் 24 மணி நேரத்தில் மருத்துவமனையை அணுக வேண்டும் என்கிற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஆட்சியர்கள் ஏற்படுத்தவேண்டும்.
பிசிஆர் பரிசோதனையின்போது மூத்த குடிமக்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனை நடத்தி விரைந்து முடிவை அறிவிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிலையான வழிகாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்யவேண்டும்.
சிகிச்சை மையங்கள் பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை செய்து வருகின்றன. அவை சிறப்பாகச் செயல்படுகின்றனவா என அடிக்கடி ஆட்சியர்கள் ஆய்வு செய்யவேண்டும். இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதை மேலும் குறைக்க மருத்துவ நிபுணர்கள், சுகாதாரக் குழுவினருடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சியில் வசிக்கும் மக்களுக்கு மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் ஆகஸ்டு 5 முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 2.5 கோடி முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்டு 29 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஆணையின்படி தமிழகத்தில் அக்.1 ஆம் முதல் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்பில் பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளைக் கேட்டறிய அனுமதித்து செப்.24 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஐயப்பாடுகளைக் கேட்க அனுமதிக்கும் இந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் நடக்கும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அளிக்கு கருத்தின் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
ஏழை மக்களைப் பாதுகாக்க உணவுப் பொருட்களை விலையின்றி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா காலத்திலும் இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தொடங்க புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் என ஒரு தனியார் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆகஸ்டு மாத ஆய்வுக்கூட்டத்தில் கூறியது போன்று நீர்நிலைகளை பருவமழைக்கு முன்பே மேம்படுத்தவேண்டும். ஏற்கெனவே இருந்த தடைகள் நீக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகம் இயல்பு நிலைக்கு படிப்படியாக மாறி வருகிறது.
பொதுமக்கள் அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT