Published : 30 Sep 2015 06:22 PM
Last Updated : 30 Sep 2015 06:22 PM
கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவில் இருந்த பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 1956-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழகத்தில் 23 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திருச்சி மாவட்டம், திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், கரூர் தீரன் சின்னமலை, பெரம்பலூர் திருவள்ளுவர் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின. இதனால் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. 1997-ம் ஆண்டு முதல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படத் தொடங்கியபோது இவை திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களாயின.
கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது முதலில் மணப்பாறையும், அதன்பின் முசிறியும் கரூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அதன்பின் அவை மீண்டும் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் 2895.57 ச.கி.மீட்டர் கொண்டது. மக்கள் தொகை 10,76,588 (2011). மாவட்ட பிரிவினையின்போது எட்டரை லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிறகு மீண்டும் 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2007-ம் ஆண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் செயல்படத் தொடங்கியது. தமிழகத்தில் மத்திய மண்டலத்தில்தான் அதிக மாவட்டங்களும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களும் அதிகளவில் உள்ளன.
குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்திலும், அரியலூர் 3-வது இடத்திலும் அதனைத் தொடர்ந்து கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT