Published : 29 Sep 2020 09:42 AM
Last Updated : 29 Sep 2020 09:42 AM
மரபணு மாற்ற கத்தரி சாகுபடிக்கு, கள ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (செப். 29) வெளியிட்ட அறிக்கை:
"நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தெலுங்குதேசம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒய்.எஸ்.அவினேஷ் ரெட்டி, மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மரபணு மாற்ற கத்திரி சாகுபடி செய்வதற்கான கள ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றார்.
மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரியை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும் (Indian Council for Agricultural Research - ICAR) தாவரவியல் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையமும் (National Botanical Research Institute) இணைந்து உருவாக்கியுள்ளன. இவற்றுக்கு ஜனத் மற்றும் பி.எஸ்.எஸ்.-793 என்று பெயரிடப்பட்டுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை பி.டி. கத்தரி விதைகளை கர்நாடகம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய எட்டு மாநிலங்களில் பரிசோதனை செய்திட கள ஆய்வுக்கு மத்திய அரசும், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவும் அனுமதி அளித்துள்ளன.
நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரி கள ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் கூறி உள்ளார். மஹிகோ எனும் மகாராஷ்டிரா ஹைபிரிட் சீட்ஸ் கார்ப்பரேஷன் (Mahyco) நிறுவனம் அமெரிக்காவின் மான்சாண்ட்டா நிறுவனத்துடன் இணைந்து மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதையை 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியது.
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis -BT) என்னும் பாக்டீரியத்தின் மரபணுவைக் கொண்டு கத்தரிக்காயின் மரபணுவை மாற்றிப் புதிய விதை உருவாக்கப்பட்டது. இது பாக்டீரிய கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பி.டி. கத்தரி விதையை மதிப்பிடுவதற்கு 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் பி.டி. கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு ஏற்ப பரிந்துரை அளித்தது. இதன் அடிப்படையில் மத்திய மரபணு பொறியியல் ஒப்புதல் குழு (Genetic Engineering Approval Committee) 2009. அக்டோபர் 14 இல் அனுமதி அளித்தது.
பி.டி. கத்தரியின் தீமைகள் குறித்த விழிப்புணர்வால் கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், மன்மோகன்சிங் அரசு 2010 பிப்ரவரியில் பி.டி. கத்தரிக்கான அனுமதியை நிறுத்தி வைத்தது.
பின்னர் 2012 இல் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ் ஆச்சார்யா தலைமையிலான வேளாண்மைத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பி.டி. கத்தரி சாகுபடி செய்வதற்கான சாதக, பாதக அம்சங்களை ஆராயப் போதுமான சோதனைகள் நடத்தப்படவில்லை. இவற்றை அறிமுகம் செய்வதற்கான அனுமதிக் குழுவை, இத்தகைய விதைகளை உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்கள் கடுமையான நிர்பந்தம் அளித்துள்ளன. அத்துடன் இத்துறையின் அமைச்சரும் பி.டி.கத்தரிக்கு ஆதரவாக நிர்பந்தம் அளிப்பதாகவும் கூறியது. பி.டி. கத்தரி விதைகள் இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியது.
உச்ச நீதிமன்றம் நியமித்த மரபணு மாற்ற ஒப்புதல் குழு உறுப்பினர் பி.எம்.பார்கவா அளித்த அறிக்கையையும் நாடாளுமன்ற நிலைக்குழு தமது கருத்துக்கு ஆதாரமாக முன் வைத்தது. பார்கவா தனது அறிக்கையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அறிமுகம் செய்திட ஒப்புதல் வழங்குமாறு தனக்குப் பல்வேறு தரப்பிலிருந்து நெருக்குதல் வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்ற எதிர்ப்புகளால் பின்வாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பி.டி. கத்தரிக்காய் சாகுபடிக்கான கள ஆய்வுகளை நிறுத்தி வைத்திருந்தது.
பி.டி. கத்தரிக்காய் மரபணு மாற்றப்பட்டு இருப்பதால், பூச்சிகள் தாக்காது. அதிக விளைச்சல் தரும் என்றெல்லாம் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சூழலியல் நிபுணர்கள் பி.டி. கத்தரியினால் ஏற்படும் தீங்குகள், நோய்கள், அதிக தண்ணீர் உறிஞ்சுவது, காட்டமான பூச்சிக் கொல்லிகள் தேவைப்படுவது, புதிய வகை பூச்சிகள் உருவாவது, உயிரியல் சூழல் பாதிக்கப்படுவது என்று பட்டியலிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் மான்சாண்ட்டா நிறுவனம்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்தரி, கடுகு உள்ளிட்டவற்றின் விதைகளை ஆய்வின் மூலம் உருவாக்கி, உலக நாடுகளில் அவற்றை அறிமுகம் செய்து, அதற்கான சந்தையைப் பிடிக்குள் வைத்துக்கொள்ள முனைந்து உள்ளது.
இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 8 விழுக்காடு பங்கைக் கொண்டிருக்கும் கத்தரிக்காய் எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும். இந்தியாவில் சுமார் 2,500 வகை நாட்டுப்புற கத்தரி வகைகள் இருக்கின்றன. ஏழைகளின் காய் எனப்படும் கத்தரிக்காய் உற்பத்தியையும், சந்தையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்க மான்சாண்ட்டா நிறுவனத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவது இந்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
பி.டி. கத்தரி சாகுபடிக்கான கள ஆய்வுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு எக்காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாட்டில் மரபணு மாற்ற கத்தரியின் களப்பரிசோதனைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT